கர்நாடக தேர்தல் 2023: தேவகவுடா குடும்பத்தில் டமால்… ஹாசன் சீட்டுக்கு வெடித்த சண்டை!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 2) வெளியாகவுள்ளன. அடுத்த சில வாரங்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது. ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக களம் மாறியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம்

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்குகள் இருந்தாலும் தற்போதைக்கு நிலைமை இப்படித்தான். இதில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் கட்சி என மதச்சார்பற்ற ஜனதா தளம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கட்சியின் தேசிய தலைவர் ஹெச்.டி.தேவகவுடா. இவரது மகன்கள் ஹெச்.டி.குமாரசாமி, ஹெச்.டி.ரேவண்ணா ஆகிய இருவரும் முக்கியத் தலைவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

குடும்ப அரசியல்

ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா தற்போது ஹாசன் தொகுதி எம்.பியாக இருக்கிறார். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இளைஞரணி தலைவராக உள்ளார். அடுத்தகட்டமாக ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவிற்கு எம்.எல்.ஏ பதவி பெற்றுவிட வேண்டும் என காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த கட்சிக்கு ஒக்கலிகா வாக்கு வங்கி பலம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஒக்கலிகா வாக்குகள்

இந்த சமூக மக்கள் அதிகம் வசிக்கும் ஓல்டு மைசூரு மண்டலத்தில் ஒவ்வொரு முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகப்படியான இடங்களை வென்று வருகிறது. இந்நிலையில் 2023 சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதல்கட்டமாக 93 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டது. இதற்கிடையில் ஹாசன் தொகுதியில் தனது மனைவி பவானி போட்டியிடுவார் என்று ரேவண்ணா திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஹாசன் தொகுதிக்கு போட்டி

இது குமாரசாமிக்கு அதிர்ச்சியூட்டியது. எதுவாக இருந்தாலும் கட்சி முடிவெடுத்த பின்னர் தான் அறிவிக்க வேண்டும். நீங்களாக முடிவு எடுக்கக் கூடாது. அந்த தொகுதியில் போட்டியிட சாமானிய தொண்டர் ஒருவருக்கே சீட் வழங்கப்படும் என குமாரசாமி அறிவித்தார். இதனால் இரண்டு மகன்களுக்கு மத்தியில் மோதல் போக்கு உருவானது.

கடுப்பான தேவகவுடா

மேலும் ஹாசன் தொகுதியில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பதை முடிவு செய்ய ஆலோசனை கூட்டத்திற்கு குமாரசாமி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ரேவண்ணா அழைக்கப்படவில்லை. விஷயம் தெரிந்ததும் தேவகவுடா கோபத்தில் கொந்தளித்து விட்டார். இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? முதலில் அந்த ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்யுங்கள்.

பாஜக வசம்

எதுவாக இருந்தாலும் பின்னர் பார்த்து கொள்ளலாம் என அறிவுறுத்தினார். அதன்படி கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் குமாரசாமி, ரேவண்ணா இடையில் பனிப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லையாம். ஹாசன் தொகுதி தற்போது பாஜக வசமுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஹாசன் மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு கடந்த முறை கைவிட்டு போனது. இம்முறை அதை சரிசெய்யும் வகையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.