பிரபல இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் நட்பு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநரான செல்வராகவன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். இவரது துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் எவர்கிரீன்.
இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘பகாசூரன்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி தனது அனுபவம் குறித்தும், பல நேரங்களில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் விதமாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்… என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவனின் பதிவு அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
newstm.in