கோவை: கோவையில் வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டிவந்த மக்னாயானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.
இதனை அடுத்து ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி வந்த நிலையில் செவ்வாய் கிழமை காலை அங்கிருந்து நடக்க ஆரம்பித்து ஆத்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் கிணத்துக்கடவு வழியாக புரவிபாளையம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தது. இதை தொடர்ந்து மதுக்கரை வனத்துறையினர் மக்னா யானையை கண்காணித்து யானையின் பின்னாலேயே குனியமுத்தூர் வரை வந்தனர். இதனை அடுத்து அந்த யானையை கண்காணித்து வந்த மதுக்கரை வனத்துறையினர் உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி பேரூர் பகுதிக்கு சென்ற மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் சிறிது கால தாமதத்திற்கு பிறகு மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி மந்திரி மட்டம் என்ற வனப்பகுதியில் விட்டனர். இதனிடையே டாப்சிலிப் பகுதியில் இருந்து கோவை வரும் வரை அந்த யானையை பின் தொடர்ந்து வந்த பொள்ளாச்சி வனத்துறையினர் அதனை அங்கேயே தடுத்து நிறுத்த தவறியதால் கோவை நகருக்குள் புகுந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் யானை வரக்கூடிய பகுதியில் ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதால் கோவை நகருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என கோயமுத்தூர் வானத்துறையினர் கடும் முயற்சிகள் மேற்கொண்டு யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.
எனினும் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் யானை கோவை நகருக்குள் புகுந்தது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து கோவைக்கு வந்த மக்னா யானை மதுக்கரை அருகே திடீரென ரயில் தாண்டவாரத்தில் நின்றது. அப்போது கேரளா செல்லக்கூடிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் அங்கிருந்த மதுக்கரை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு நொடி பொழுதில் யானையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காட்சியில் தண்டவாளத்தில் நிற்கக்கூடிய மக்னா யானையை வனத்துறையினர் வேறு பக்கம் விரட்ட கடும் முயற்சி மேற்கொள்வதும் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து நொடி பொழுதில் யானை கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சி சினிமாவை மிஞ்சும் அளவு உள்ளது. பொள்ளாச்சி வனத்துறையினர் உரிய முயற்சிகள் மேற்கொள்ளாதது இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகும் யானைகளை உடனடியாக அப்பகுதியில் உள்ள வனத்துக்குள்ளேயே விரட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் இது போன்ற விபத்துகளில் யானைகள் சீக்கி உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
மேலும் அந்த சமயத்தில் ரயிலில் யானை அடிபட்டு இருந்தால் யானை உயிரிழப்பதோடு ரயில் தடம் புரண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் வனத்துறையினரின் இந்த பணி பாராட்டுக்குறியது என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.