இன்ஸ்டா மூலம் குறிவைக்கப்பட்ட இளம்பெண்கள்; `காதல்' போர்வையில் லட்சங்களைச் சுருட்டிய `பலே' குடும்பம்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் விஜயை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருக்கின்றனர்.

இதையடுத்து, தன்னை பெண் பார்க்க வருமாறு விஜயிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். முதலில் மறுத்த விஜய் பின்னர் அந்தப் பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, தன் பெற்றோர், உறவினர்களுடன் பரமக்குடியில் வீட்டுக்கு வந்து பெண் கேட்டிருக்கிறார். அப்போது விஜய் உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், எனக்கு ரூ.60 லட்சம் ரொக்கமும், 100 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதற்குப் பெண் வீட்டார் சம்மதிக்காத நிலையில், விஜயை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என மகள் அடம்பிடித்ததை தொடர்ந்து வேறு வழியில்லாமல் பெண்ணின் பெற்றோர் வரதட்சணை கொடுக்க சம்மதித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருமணத்துக்கு முன்பாக வரதட்சணை பணம், நகைகளை கொடுத்து விட வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட விஜய் மற்றும் அவரது குடும்பம்

அதன்படி, விஜய்யின் வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலம் பல தவணைகளாக ரூ.44,60,997-ம், நேரில் ரொக்கமாக ரூ.10 லட்சமும் என மொத்தம் ரூ.54,60,997-ம், 15 பவுன் நகைகளை பெற்றிருக்கிறார். மேலும் பெண்ணின் தாயாருக்குச் சொந்தமான காரை விஜய் எடுத்துச் சென்று அவரின் கையெழுத்தை போலியாக ,போட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்திருக்கிறார்.

பணம், நகைகளை கொடுத்த பின்பும் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், விஜய் தட்டி கழித்து வந்திருக்கிறார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் ஈரோட்டில் உள்ள விஜயின் வீட்டுக்கு திருமணம் குறித்து பேசுவதற்காக சென்றிருக்கின்றனர். அங்கு விஜய், அவரின் குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையம்

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் அந்தப் பெண்ணின் பெற்றோர் புகாரளித்தனர். அவரின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விஜய், அவரின் தந்தை கோவிந்தராஜ், தாய் சாவித்திரி, சகோதரர் முருகேஷ் என்ற வருண், சகோதரி சங்கீதா மற்றும் உறவினர்கள் வைத்தீஸ்வரன், ரவிக்குமார், பிரீத்திமனுவேல் ஆகிய 8 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு வார தேடுதலுக்கு பிறகு ஈரோட்டில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த விஜய், அவரின் தந்தை கோவிந்தராஜ், தாய் சாவித்திரி, சகோதரர் முருகேஷ் என்ற வருண், உறவினர் வைத்தீஸ்வரன் ஆகிய ஐந்து பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வைத்தீஸ்வரன்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி குடும்பத்துடன் பணம் பறித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் எத்தனை பெண்களை இதேபோல் ஏமாற்றி பணம் பறித்து வந்திருக்கின்றனர் என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.