புதுடில்லி: அதானி நிறுவனங்கள் குறித்த ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஏஎம் சாப்ரே தலைமையில் குழுவை அமைத்துள்ள உச்சநீதிமன்றம், 2 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபி.ஐ., இது குறித்து விசாரிக்க வேண்டும் என, அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதமாக, பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம்’ என தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அந்த குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். குழு உறுப்பினர்களின் பெயர்களை, ‘சீலிடப்பட்ட’ உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்கிறோம் எனக்கூறியது.
ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. நீதிமன்றமே ஒரு குழுவை அமைக்கும் எனக்கூறியது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் விரிவாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஎம் சாப்ரே தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.
முன்னாள் நீதிபதிகள் ஓ.பி.பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேனி ஆகியோர் சிறப்பு குழுவில் இடம்பெறுவார்கள் பொது மக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
சிறப்பு நிபுணர் குழு இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பங்குகளின் விலைகளில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா? செபி விதிகளின் 19வது விதி மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து செபி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அதானி நிறுவனம் வரவேற்றுள்ளது. இதன் மூலம் உண்மை வெளியே வரும் எனக்கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்