இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி நமது நாட்டில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மத்திய மற்றும் மாநில அளவிலான தேர்தல்களை நேர்மையாக, விறுப்பு வெறுப்பின்றி, ஒரு சார்பின்றி நடத்தி முடிக்கும் பொறுப்பு இவர்கள் கைகளில் தான் இருக்கிறது. இவர்களது பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 65 வயது. தலைமை தேர்தல் ஆணையர்கள், இரண்டு தேர்தல் ஆணையர்கள் நாட்டின் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவர். இருப்பினும் மத்திய அரசு பரிந்துரை செய்யும் நபரையே தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க குடியரசு தலைவர் உத்தரவிடுவார்.
தேர்தல் ஆணையர் நியமனம்
அப்படி பார்த்தால் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள், தலைமை நீதிபதி, சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பலரும் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட இதுபற்றி வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. முன்னதாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நியமனத்தை மறுசீரமைக்க வேண்டும் எனப் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கொலிஜியம் போன்று ஒரு அமைப்பு வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அரசியல் சாசன அமர்வு
இந்த வழக்குகளை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் அஜய் ரஸ்டோகி, அனிருத்தா போஸ், ஹிரிஷிகேஷ் ராய், சிடி ரவிக்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட குழு
அதில் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மத்திய அரசுக்கு சாதகமாக தேர்தல் ஆணையர்கள் வர முடியாது. நடுநிலையான நபர்கள் பொறுப்பேற்று நேர்மையான வழியில் தேர்தல்களை நடத்த வழி ஏற்படும் எனக் கூறுகின்றனர்.
சாதக, பாதகங்கள்
அதேசமயம் இது பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் சிலர் கூறுகின்றனர். ஏனெனில் உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் என இருவர் ஒருமித்த முடிவை எடுத்தால் எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாடு எடுபடாமல் போய்விடும். உச்ச நீதிமன்ற நீதிபதி கொலிஜியம் மூலம் நியமிக்கப்பட்டாலும் இதன் பின்னணியிலும் மத்திய அரசின் காய் நகர்த்தல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி பார்த்தால் மீண்டும் மத்திய அரசுக்கே சாதகமாக முடிவுகள் அமைய வாய்ப்புகள் உண்டாகும். எனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள மூன்று பேர் கொண்ட குழுவை இன்னும் பலமாக விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கின்றனர்.