வல்லவளுக்கு வல்லவன்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அவன் ஒரு சராசரி இந்தியனாக இருந்தான். எந்த ஒரு ஜன கூட்டத்திலும் தொலைந்து போகக் கூடியவனாக இருந்தான். அவனை பற்றி விசேசமாக சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. மிக சாதாரணமாக அவன் இருந்ததே, கடந்த அரை மணி நேரத்திற்கும் மேல் அவன் அந்த தபால் அலுவலகத்தில் இருந்த ஒரே மர மேஜையில் அமர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தது யாருக்கும் வித்தியாசமாக படவில்லை.

ஆனால் அவன் அந்த தபால் அலுவலகத்தின் வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும் கடந்த முப்பது நிமிடங்களுக்கும் மேல் நோட்டமிட்டிருந்தான்.

அது பெண்களால் இயக்கப்பட்ட தபால்நிலையம். ஏதோவொரு ரியல் எஸ்டேட் கம்பெனி கொடுத்திருந்த போன வருட காலண்டர் அப்படியே மாற்றப்படாமல் தொங்கி கொண்டிருந்தது. சிசிடீவி காமெரா கண்ணில் தென்படவில்லை. மாறாக “ஒரு கண் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று ஒரு ஏ4 பேப்பரில் கம்ப்யூட்டர் ப்ரிண்ட் எடுக்கப்பட்டு ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது.

Representational Image

இரண்டு பெண் அலுவலர்கள்.

ஒருத்தி வயதானவள். கண்ணாடி அணிந்திருந்தாள். ஒரு காலத்தில் அழகாய் இருந்திருக்க வேண்டும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சூப்பர் ஆன்யுவெசன் ஆகி வீட்டிற்கு போய் பேரன் பேத்திகளுடன் நேரத்தை கழிக்க தயாரானவள் போல் இருந்தாள். அவள் அவளது கௌண்டரில் வந்து நின்றவர்களை கையாண்டதில் ஒருவித களைப்பு தெரிந்தது.

இன்னொருத்தி வயது சற்று குறைந்தவள். அவள் அவளிடம் வந்து நின்றவர்களை கையாண்டதில் ஒரு வித படபடப்பு தெரிந்தது.

அவர்களுக்குள் ஒரு வித அடிப்படை புரிதல் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. அவர்கள் இருவரும் தங்களுக்குள் வேலை ஒதுக்கீடு செய்துகொண்டு திறமையாக அந்த தபால் நிலையத்துக்கு வந்திருந்த கூட்டத்தை திறம்பட கையாண்டு கொண்டிருந்தார்கள்.

மாத முதல் வாரமாக இருந்ததால் அதிக குடியிருப்புகள் கொண்ட பகுதியில் இருந்த அந்த தபால் நிலையம் சற்று பரபரப்பு அதிகமாகவே இருந்தது. மக்கள் தொடர்ச்சியாக அந்த தபால் நிலையத்துக்குள் தொடர்ந்து வந்தவாறும் சென்றவாறும் இருந்தார்கள்.

Representational Image

அவன் அருகில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார்.

“அப்பா! என்ன வெயில்? என்ன வெயில்? க்ளோபல் வார்மிங்கில் எல்லாமே மாறிப்போச்சு தம்பி.எல்லாமே தப்பு தப்பா நடக்குது”

அவன் அவர் சொன்னதை கவனியாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான்.

அவனிடம் அனுதாபத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன அந்த முதியவர் சற்று தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த வயது முதிர்ந்தவளாக இருந்த அந்த பெண்ணிடம் சென்று,” மணி ஆர்டர் ஃபார்ம் கொடுங்கள்” என்றார்.

அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே அந்த வயது முதிர்ந்த பெண் பக்கத்து கௌண்டரை நோக்கி கை காண்பித்தாள்.

பக்கத்து கௌண்டரில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

“மேடம் என் சேவிங்க்ஸ் கணக்கில் ஐம்பதாயிரம் பணம் கட்ட வேண்டும். பான் நகல் வச்சுருக்கேன்”

அந்த வயது சற்று குறைந்த பெண் அதே படபடப்புடன்,” சீக்கிரம் கொடுங்க” என்று சொல்லி பணத்தை வாங்கி கணக்கில் வரவு வைத்து பாஸ் புத்தகத்தை அந்த பெண்ணிடம் திருப்பி கொடுத்தாள்.

அடுத்து நின்ற முதியவர்,” அம்மா, ஒரு மணி ஆர்டர் ஃபார்ம் கொடுங்க ப்ளீஸ்” என்றார்.

“எவ்வளவு சார் அனுப்பணும்?”

“ஐந்தாயிரம்மா”

“கமிஷன் இருநூற்றி ஐம்பது தெரியும்ல” அவள் சொன்னது வாக்கியமாகவும் இருந்தது. கேள்வியாகவும் இருந்தது.

“தெரியும்மா. இப்ப அனுப்பிச்சா எப்ப போய் சேரும்?”

“இப்பல்லாம் எலக்ட்ரானிக் மணி ஆர்டர் சார். சாயந்திரமே ரீச் ஆயிடும்”

இதை எல்லாம் கவனித்தும் கவனியாதவாறே அவன் தனது கடிதம் எழுதும் வேலையில் கருத்தாயிருந்தான்.

Representational Image

அவள் கொடுத்த ஃபார்ம் வாங்கிக் கொண்டு அவன் அருகில் வந்து மீண்டும் அந்த முதியவர் அமர்ந்தார்.

அதற்குள் இன்னும் இருவர் அந்த அலுவலகத்துள் வந்திருந்தனர்.

அந்த முதியவர் அவனிடம் அந்த மணி ஆர்டர் விண்ணப்பத்தை நீட்டி,” தம்பி, பேத்திக்கு பணம் அனுப்பணும். கொஞ்சம் ஃபார்ம் நிரப்பி தர்றீங்களா?” பணிவாகவே கேட்டார்.

அவன் அவரிடம் எதுவும் பேசாமல் விண்ணப்பத்தை வாங்கி அவர் சொன்ன முகவரிக்கு நிரப்பி கொடுத்தான்.

அவர் அவன் அருகில் அமர்ந்து தன் கையில் கொண்டு வந்திருந்த பணத்தை எடுத்து எண்ண தொடங்கினார்.

ஐந்நூறு ரூபாய் நோட்டுகளாக பதினொன்று எண்ணி கையில் வைத்து கொண்டார்.

அவர் பணத்தை எண்ண எடுத்த பொழுது ஒரு இருநூறு ரூபாய் தாள் கீழே விழுந்ததை அவர் கவனிக்கவில்லை.

அந்த இருநூறு ரூபாய் கீழே விழுந்ததையும் அதை அந்த முதியவர் கவனியாததையும் அவன் கவனித்துக் கொண்டே இருந்தான்.

அவர் பணம் அனுப்ப எழுந்த பொழுது அவன் குனிந்து கீழே கிடந்த அந்த இருநூறு ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்ட அவர் அவனை நோக்கி,” ரொம்ப தாங்க்ஸ் தம்பி. மருந்து வாங்க சரியாக எடுத்து வந்தேன்” அவர் கண்களில் ஆத்மார்த்த நன்றி தென்பட்டது.

அவன் ஒரு புன்சிரிப்புடன் அந்த நன்றியை ஏற்றுக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தான். அந்த முதியவர் மீண்டும் அந்த வயது குறைந்த பெண்ணுக்கு எதிரில் சென்றார்.

“வரிசைலே நில்லுங்க” என்று அந்த முதியவரை பார்த்து அந்த பெண் சற்று கடினமாகவே சொன்னாள்.

வயது முதிர்ந்தவளாக இருந்தவளிடம் ஒருவர் பதிவு தபால் அனுப்பி கொண்டிருந்தார்.

Representational Image

அவர் முறை வந்ததும் அந்த முதியவர் அந்த பெண்ணிடம் நிரப்பப்பட்ட ஃபாரத்தை நீட்டினார்.

“பணத்தை கொடுங்க”

அந்த முதியவர் தன் சட்டை பையில் இருந்து தான் முதலிலேயே எண்ணி வைத்திருந்த பதினோரு ஐந்நூறு ரூபாய் தாள்களை கொடுக்க எடுத்தார்.

அவர் அந்த பணத்தை எடுத்த பொழுது மீண்டும் அவர் சட்டை பையில் இருந்து அந்த இருநூறு ரூபாய் தாள் கீழே விழுந்தது.

“அடச்சே” என்று சொல்லிக் கொண்டே அந்த இருநூறு ரூபாய் தாளை அந்த முதியவர் கீழே குனிந்து எடுத்து தன் சட்டை பையில் வைத்தார்.

அந்த பெண் ஒருவித பதட்டத்துடன் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு பணம் அனுப்பிய ரசீதுடன் மீதியை கொடுத்தாள்.

மீதியை வாங்கிய அந்த முதியவர்,” ஏம்மா? ஐம்பது ரூபாய் தான் இருக்கு. இருநூறு ரூபாய் இல்லியே” என்றார்.

அந்த பெண்,” சட்டை பையில் பாருங்க பெரியவரே. நீங்கள்ளாம் ஏன் வர்ரீங்க. வயசுல சின்னவங்கள அனுப்பவேண்டியது தானே” என்று சற்று முறைப்பாகவே சொன்னாள்.

“இல்லம்மா. அந்த இருநூறு ரூபாய் முதலிலேயே என்னிடம் இருந்தது. தம்பி நீங்கள் பார்த்தீங்கள்ளே “

அவனை ஆதரவிற்கு அழைத்து பார்த்தார் அந்த முதியவர்.

அவன் அவரின் ஆதரவிற்கு வருவது போல் தெரியவில்லை. வேறு வழியின்றி அந்த முதியவர் ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே வெளியில் நடந்தார்.

அடுத்து அவன் அந்த பெண்ணிடம் வந்து தான் நிரப்பி வைத்திருந்த மணி ஆர்டர் ஃபாரத்தை நீட்டினான்.

அதை வாங்கி பார்த்த அவள் அவனை பார்த்து,” பத்தாயிரமா?” என்றாள்.

Representational Image

அவன் எதுவும் பேசாமல் ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

“ஐந்நூறு ரூபாய் கமிஷன் வரும்”

சரி என்று தலையசைத்த அவன் பணத்தை எண்ணி அந்த பெண்ணிடம் கொடுத்தான்.

அதை எண்ணிய அந்த பெண் ஒரு ஐந்நூறு ரூபாய் அதிகம் வருவது கண்டு மீண்டும் எண்ணினாள். ஐந்நூறு ரூபாய் அதிகம் தான் இருந்தது.

“சரியா இருக்காங்க” என்று கேட்ட அவனை நோக்கிய அவள் “ சரியா இருக்கு” என்று கூறி பணம் அனுப்பிய ரசீதை அவன் கைகளில் திணித்தாள். அவன் கையில் ரசீதை அவள் திணித்த வேகத்தை அவன் கவனிக்க தவறவில்லை.

மணி ஆர்டர் அனுப்பிய அவன் இது வரை எழுதிக்கொண்டிருந்த கடிதத்தை மடித்து வெளியில் நடந்தான்.

அந்த பெண் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

”இன்று இது போதும். எழுநூறு ரூபாய் லாபம்”. மறக்காமல் ஒரு ஐந்நூறு ரூபாயையும் ஒரு இருநூறு ரூபாயையும் பிரித்து அந்த சக அலுவலர் கவனியாத பொழுது தன் பர்சில் பத்திரப்படுத்திக் கொண்டாள் அந்த பெண். அவளிடம் இருந்த பதட்டம் இப்பொழுது தணிந்திருந்தது.

அலுவல் நேரம் முடிந்ததும் நாலரை மணி போல ஒரு வான் அந்த தபால் நிலைய வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கி அந்த தபால் நிலையம் உள்ளே நடந்தனர். ஒருவன் கையில் சாக்கு போன்ற காக்கிபை இருந்தது. இன்னொருவன் ஒரு சூட்கேசை எடுத்துக் கொண்டு வந்தான்.

அவர்கள் இருவரை பார்த்ததும் அந்த வயதில் முதிர்ந்தவள் எழுந்து ஒருவித செயற்கை மலர்ச்சியுடன் வரவேற்றாள்.

அந்த வயது குறைந்த இன்னொரு பெண் தன் கணக்கை சமன் படுத்தி கொண்டிருந்தாள்.

சாக்கு பையுடன் இருந்தவன் வயது முதிர்ந்தவளிடம் போய் அன்றைய பதிவு தபால்களையும் விரைவு தபால்களையும் எண்ணி வாங்கி ஒரு தாளில் ஏதோ எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தான்.

Representational Image

சூட்கேசுடன் இருந்தவன் அந்த இன்னொரு பெண்ணிடம் போய் நன்கு வசதியாக அமர்ந்துகொண்டான்.

அவள் கொடுத்த கணக்கை எண்ணி பார்த்து ஒரு விசில் அடித்து,” பரவாயில்லையே! இன்றைய ஒரு நாள் வசூல் பத்து லகரத்திற்கும் மேலா?” என்று சொல்லிக் கொண்டே அவள் அடுக்கி வைத்திருந்த பணத்தை எண்ண ஆரம்பித்தான்.

ஒரு ஐந்நூறு ரூபாய் கட்டை ஒரு முறை எண்ணியவன் மீண்டும் எண்ண தொடங்கினான்.

அந்த வயது குறைந்த பெண் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த கட்டில் இருந்து இருபத்தி இரண்டு தாள்களை பிரித்து எடுத்த சூட்கேஸ்காரன், அந்த வயது குறைந்தவளை நோக்கி,” அனைத்தும் ஜாலி நோட்டுகள். மொத்தம் பதினோறாயிரம். இன்னைக்கு கணக்கு முடிப்பதற்குள் வேறு மாற்று நோட்டிற்கு ஆவன செய்யுங்கள். இல்லாவிடின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்றான்.

அந்த தாள்களில் இருந்த காந்தி தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார்.

இப்படிக்கு

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.