தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம் பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க ‌ வேண்டும் என தமிழ்நாடு அரசு 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை அமல்படுத்தக்கூடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2018 முதல் 2022 வரை 6074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதமும், 349 ஹோட்டல்களில் இருந்து ரூ.32,800 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரசு விதிமுறைகளையின்படி கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை வைக்காமல் இருப்பவர்களுக்கு தற்போது வரை 50 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

அரசாணை வந்தபோது 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அரசாணையின் படி தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முதல் முறை ஒரு தொகை அபராதமும், இரண்டாவது முறையும் தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அபராத தொகை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாணையின்படி தமிழ் மொழியிலேயே பெயர் பலகை வைப்பதை குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.