மாஸ்கோ,
உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷிய பகுதிகளில் அவ்வப்போது ‘டிரோன்’ தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் எல்லையோரம் உள்ள ரஷியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து ‘டிரோன்’ தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு ரஷியாவின் மேற்கு பெல்கொரோட் பிராந்தியத்துக்குள் 3 டிரோன்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கார்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் பிராந்திய ஆளுநர் வியசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோனை ரஷிய படையினர் சுட்டு வீழ்த்தியதாக அதன் ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவித்தார். அதேபோல் கிரஸ்னொடார், அடிகியா பிராந்தியங்களிலும் 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள குபஸ்டோவோ கிராமத்தில் வனப்பகுதிக்கு அருகில் டிரோன் ஒன்று விழுந்து நொறுங்கியது. எனினும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டினாலும், அதற்கு உக்ரைன் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அடுத்தடுத்து நடத்தப்பட்ட ‘டிரோன்’ தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.