பெங்களூரு –
திருமணத்துக்கு மறுப்பு
பெங்களூரு டொம்லூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர்(வயது 28). இவருக்கும், முருகேஷ்பாளையா பகுதியை சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இதுகுறித்து லீலாவின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் மகளிடம் காதலை கைவிடுமாறு கூறினர்.
பெற்றோரின் அறிவுரையை ஏற்ற லீலா, காதலை கைவிட முடிவு செய்தார். ஆனால் அதற்கு திவாகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று லீலா தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த திவாகர், லீலாவை தனியாக அழைத்து பேசினார்.
அப்போது அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் அதற்கு லீலா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது காதலியான லீலாவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் தலை, கழுத்து, வயிற்றுப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
10 முறை குத்தி கொலை
இதுகுறித்து ஜீவன்பீமா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருமணத்துக்கு லீலா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அவரை திவாகர் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து திவாகரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமா சங்கர் குலேத் கூறுகையில், திருமணம் செய்ய கோரியதற்கு, பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரை 10-க்கும் மேற்பட்ட முறை திவாகர் கத்தியால் குத்தி உள்ளார் என்றார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.