சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்போவதாகக் கூறி, இதுவரையில் இருந்துவந்த ஒலிபெருக்கி அறிவிப்புகளை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது தென்னக ரயில்வே. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய, தமிழகத்தின் மிகப் பழைமையான ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரயில்களைக் கையாளும் இந்த ரயில் நிலையத்துக்கு லட்சக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் வசதிக்காக, ரயில்களின் எண், நிற்கும் நடைமேடை எண், புறப்படும் நேரம், வந்துசேரும் நேரம் உள்ளிட்ட அத்தனைத் தகவல்களும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பயணிகள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் அவர்களின் காதுகளைத்தேடி எளிதில் கிடைக்கும்படியாக இருந்தது. மேலும், படிக்கத்தெரியாத பாமரர்கள், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும்கூட பயனுள்ளதாக இருந்துவந்தது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்படவிருப்பதாகவும், அதற்கான முன்னோட்ட முயற்சியாக ரயில் நிலையத்தில் காலங்காலமாக இருந்துவரும் ஒலிபெருக்கி அறிவிப்புகளை நிறுத்திவிட்டு முழுவதும் டிஜிட்டல் திரையில் படித்து தெரிந்துகொள்ளும்படி புதிதாக மாற்றம் செய்திருக்கிறது தென்னக ரயில்வே. மேலும் இந்த அறிவிப்பின்படி `இது ஒரு நிசப்தமான ரயில் நிலையம்’ என்ற புதிய பெயரையும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கொடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27-ம் முதல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதற்குப் பதிலாக, ரயில்களின் எண், நடைமேடை எண், புறப்படும்-வந்தடையும் நேரம் என அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக `உதவி மையங்கள்’ (Help Desk) சிலவும் திறக்கப்பட்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நுழைவு வாயில்களில் `பிரெய்லி’ முறையில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் இந்த புதிய மாற்றத்தால் பெரும் சிக்கலுக்கு ஆளாகிவருவதாக பாதிக்கப்பட்ட சென்ட்ரல் ரயில்வே பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து சென்ட்ரல் ரயில் நிலையப் பயணிகளிடம் பேசியபோது, “ஏர்ப்போட்டில் இருப்பது போன்று, சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் அனௌன்ஸ்மென்ட்டுக்கு பதிலாக டிஜிட்டில் போர்டில் ரயில் விவரங்கள் தெரிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதலில் ஏர்ப்போர்ட்டுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் எழுதப்படிக்கத் தெரிந்த எஜுகேட்டட் மக்கள்தான். அவர்களுக்கு அதில் பெரிதாக சிரமம் இல்லை. ஆனால், ரயில் நிலையத்தை கடைகோடி பாமர மக்கள்வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் சொல்வதுதான் புரியும், எளிதாகவும் இருக்கும்.
இனி இந்த அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண பாமர மக்கள்தான்! மேலும், இனி ஒலிபெருக்கி சத்தத்தால் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது என காரணம் சொல்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். முதலில் ரயில் நிலையம் என்றாலே ரயில் இன்ஜின் இரைச்சலும், பொதுமக்கள் சத்தமும் சகஜம்தானே. ரயில் வண்டிகளே ஒலியெழுப்பி தானே புறப்படுகின்றன. ஒலிபெருக்கி அறிவிப்பால் இந்த சத்தங்கள்தான் சமன்செய்யப்படுகின்றனவே தவிர, இதனால் பயணிகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒலிபெருக்கி நிறுத்தியதிலிருந்துதான் சிக்கலே!” எனத் தெரிவித்தனர்.
அதேபோல கேரளாவுக்குச் செல்லும் ஒரு பயணி, “முதலில் இருக்கிற இடத்திலிருந்தே ஒலிபெருக்கி மூலம் சொல்லப்படும் தகவல்களைக் கேட்டு பிளாட்ஃபார்முக்குச் சென்றோம். இப்போது டிஜிட்டல் திரையை நோக்கி ஓடவேண்டியதிருக்கிறது. திரை மாறும்வரை காத்திருக்கவேண்டியதாக இருக்கிறது. ஒருகூட்டமே திரைக்குமுன்னால் வந்துநிற்பதால் கூட்டநெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் வீண் நேரவிரயமும், அவதியும்தான் மிச்சம்” எனத் தெரிவித்தார்.
இன்னொரு பெண்பயணி, “பயணிகளுக்கு உதவுவதற்காக ரயில்வே நிர்வாகம் அமைத்திருக்கும் உதவி மையங்கள் மிகக்குறைவான எண்ணிக்கையிலே இருக்கின்றன. இதனால் வரிசையில் நின்று உதவிகேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. பலர், அருகில் இருக்கும் சக பயணிகளிடம்தான் பரிதாபமாக உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். தென்னக ரயில்வே எடுத்திருக்கும் இந்தமுடிவு நிச்சயம் மக்களுக்குச் சாதகமானதாக இல்லை!” என்றார்.
இந்த விவகாரம் குறித்து கருத்த தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் செயற்பாட்டாளர் பேராசிரியர் தீபக்நாதன், “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பை நிறுத்தியிருப்பது தவறு! இது பார்வை குறைபாடுள்ள தோழமைகளின் பயணத்தை மேலும் கடினமாக்கும். இது போன்ற முடிவுகள் எடுக்கும்போது மாற்றுத்திறனாளிகளை கலந்தாலோசிக்காதது ஏன்… இது மாற்றுத்திறனாளிகள் சட்ட உரிமை மீறல்!” என கண்டித்திருக்கிறார்.
பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தென்னக ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “பயணிகளுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்துக்கு என்ன லாபம் இருக்கப்போகிறது… இந்தத் திட்டத்திலிருக்கும் நேர்முறையான, எதிர்மறையான விஷயங்களையெல்லாம் கலந்துப்பேசிதான் நிறைவேற்றியிருக்கிறோம். புதிய முறையாக இருப்பதால் பயணிகள் இதற்கு பழகிக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் கொஞ்சம் காலம் எடுக்கும். மேலும், பொதுப் பயணிகளுக்கு உதவும்வகையில் ரயில் நிலையத்தின் முக்கியமான இடங்களில் இன்னும் நிறைய டிஜிட்டல் திரைகளை அமைக்கப்போகிறோம். மேலும், ரயில் நிலைய நுழைவாயில்களில் கூடுதலான உதவி மையங்களையும் திறக்கப்போகிறோம்!” எனத் தெரிவித்தார்.