இந்தியாவில் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மாநில அரசுகளுடன் இணக்கமானப் போக்கைக் கைபிடிக்காதது நீண்டகாலப் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆளுநர்கள் மாநில அரசுகளின் அமைச்சரவை முடிவுகளை ஏற்பதில் தாமதம் செய்வது, அவற்றை திருப்பி அனுப்புவது போன்ற சம்பவங்கள், அரசியல் களத்தில் அடிக்கடி நடக்கின்றன.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்தப் பிறகு ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே மாநில அரசின் செயல்பாடுகள், முடிவுகளில் தலையிடுவது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரைக் குற்றம்சாட்டி வருகின்றன.
அதே போல் `தமிழ்நாடு, தமிழகம்’ பிரச்னை, திராவிட கொள்கைகள் குறித்து விமர்சிப்பது, சட்டமன்ற வெளிநடப்பு என ஆளும் தி.மு.க அரசுக்கும், ஆளுநருக்குமான முரண் தொடர்ந்து நீடிக்கிறது.
தமிழ்நாட்டைப் போலவே பஞ்சாப்பில் மாநில அரசுடன், அந்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பனிப்போர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான விவகாரத்தில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு குட்டு வைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.
மார்ச் மூன்றாம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரை நடந்த திட்டமிட்டிருந்தது பஞ்சாப் மாநில அரசு. எனவே, இது குறித்து சம்மன் வழங்க அந்த மாநில ஆளுநரை அணுகியிருக்கிறது. ஆனால், அதற்கான சம்மனை வழங்க பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் மறுப்பு தெரிவித்த விவகாரத்தை வெளிப்படையாக மாநில அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரின் முடிவில் திருப்தியில்லாததால் பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
பஞ்சாப் மாநில அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 174-ன் படி சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான அனுமதியை மறுக்க மாநில ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது ஆளுநரின் அப்பட்டமான விதிமீறல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற பஞ்சாப் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர். இதைப் பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனெவே சுட்டிக்காட்டியிருக்கிறது.
அமைச்சரவைக் குழு ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், அதை ஆளுநர் ஏற்க வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டுவது ஆளுநரின் கடமை, ஆளுநர் கேட்கும் விவரங்களை மாநில அரசு முறையாகத் தரவேண்டியது முதலமைச்சரின் கடமை” எனத் தெரிவித்தது.
பா.ஜ.க ஆளாத தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை ஆளுநர்கள் போட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், பஞ்சாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. “உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் குறித்து மட்டும் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத அனைத்து மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கும் இந்தக் கருத்து பொருந்தும்” என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து தொடர்பாக சி.பி.எம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது ஒரு சட்டத்துக்குச் சமம். இந்த தீர்ப்பு பஞ்சாப் மட்டுமல்ல தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் பணியாற்றக்கூடிய ஆளுநர்களையும் கட்டுப்படுத்தும். மத்திய அரசாங்கம் ஆளுநர்களைப் பாதுகாக்கிறது, மாநில விவகாரங்களில் தலையிடுவதற்காகவே மத்திய அரசு ஆளுநர்களை இயக்குகிறது. மாநில அரசுக்கு இன்னல்களை ஏற்படுத்தவே சில ஆட்களை நியமிக்கின்றனர். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தலைமையிலான அரசு முயல்கிறது. முடியாத பட்சத்தில் மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் ஆளுநர்களை வைத்து குடைச்சல் தருவதுதான் பா.ஜ.க-வின் பாணி. இதையேதான் தமிழகத்திலும் செய்து வருகிறார்கள்” என்றார்.
“தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ரம்மி விவகாரம் இன்றளவிலும் தீர்க்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதைப் பொருட்படுத்தாத ஆளுநர், அரசியல் நோக்கோடு செயல்படுவது வருத்தத்துக்குரியது. ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மட்டுமின்றி ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கும் அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீர்வுகாண வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.