தமிழக அரசு மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் பொழுது அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத் தலைவருக்கு உரிமை தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதன்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோ அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று வயதுவரம்பு, குடும்பத்தின் ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு உரிமை தொகை கிடையாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடையும் கல்லூரி மாணவிகளின் தாயர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்பெற முடியும் என்றும் தெரியவந்துள்ளது.
குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை பெற குடும்ப அட்டையில் எந்தவித மாற்றமும் செய்யத் தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்கழகத்தை நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித் தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.