ரயில்வே மேம்பாலப் பணிக்காக தேனி திட்டச்சாலை பணி நிறைவடையுமா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி: தேனி-மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி வேகமெடுத்துள்ள நிலையில், போக்குவரத்தினை மாற்றிவிடும் வகையில் முடங்கிக் கிடக்கும் தேனி திட்டச்சாலைப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதியின் காரணமாக கடந்த 1996ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தேனியை தலைமையிடமாக கொண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இப்புதிய மாவட்டம் கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி முதல் செயல்படத் தொடங்கியது. மாவட்ட தலைநகராக தேனி அறிவிக்கப்படும் வரை பெரியகுளம் தாலுகாவிற்குள் தேனி நகரானது இருந்து வந்தது. தேனி மாவட்டம் பிரிக்கப்படும்போது தேனி தாலுகாவும் உருவாக்கப்பட்டது. மாவட்ட தலைநகராகவும், தாலுகா தலைநகராகவும் தேனி உருவெடுத்த கடந்த 26 ஆண்டுகளில் தேனி நகரானது பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

தேனியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலகங்கள் தேனிக்கு வந்ததையடுத்து, தேனிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேனி வந்து குடியேறிவிட்டனர். மாவட்ட தலைநகரென்பதால் மதுரை போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு கார்ப்பரேட் வணிக நிறுவனங்களும் தேனிக்கு வந்து விட்டன. அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கலை, அறிவியல் கல்லூரிகளி, பொறியியல் கல்லூரிகளும் தேனியை மையம் கொண்டு வந்து விட்டன. இதன்காரணமாக தேனியானது நிர்வாக நகர் என்பதோடு, வர்த்தகம், மருத்துவம் மற்றும் கல்வி நகராகவும் உருவெடுத்துள்ளது. இதன்காரணமாக தேனி நகரானது எப்போதும் மக்கள் போக்குவரத்து மிகுந்த நகராக மாறியுள்ளது.

தேனியில் நாளுக்கு நாள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ள நிலையில் தற்போது தேனி நகராட்சிக்குள் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும், கல்வி, மருத்துவம், வணிகம், அரசுத்துறை அலுவலகங்களுக்கு என நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் தேனியில் முக்கிய சாலைகளான பெரியகுளம் சாலை, கம்பம் சாலை, மதுரை சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இப்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேனி நகராட்சி பகுதிக்குள் சுப்பன் தெரு, சுந்தரம் தியேட்டர் முதல் கம்பம் ரோடு வரை என திட்டச்சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், சுப்பன் தெரு திட்டச்சாலையானது கொட்டக்குடியில் துவங்கி அரண்மனைப்புதூர் திருப்பம் செல்லும்சாலையில் தனியார் ஒருவர் நிலத்தை நகராட்சிக்கு ஒப்படைக்க மறுப்பதால் இத்திட்டச்சாலை பணி பாதியிலேயே நிற்கிறது.

சுந்தரம் தியேட்டர் முதல் கம்பம் சாலை வரையிலான திட்டச்சாலையில் கம்பம் சாலையை ஒட்டிய பகுதியில் முஸ்லீம் பள்ளி வாசல், மற்றும் ஆர்யவைஸ்ய சமூக மண்டபத்திற்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளதால் இத்திட்டச்சாலையும் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது போடியில் இருந்து மதுரை வரையிலான அகல ரயில் பாதை சேவை முதல் கட்டமாக தேனியில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்டு வருகிறது. ரயில் வந்து செல்லும் போதும், ரயில்வே பாதையை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும்போதும் ரயில்வே கேட் மூடப்படுவதால் தேனி-மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க இச்சாலையில் ரயில்வே மேம்பாலம் ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை சாலையில் உள்ள எல்.எஸ்.மில் அருகில் தொடங்கி பென்னிகுக் நகர் திருப்பம் வரை சுமார் 1,050 மீட்டர் நீளத்திற்கு சுமார் 14 மீட்டர் அகலமுள்ள பிரமாண்ட பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் விரைவில் பாலம் முழுமைப்படுத்துவதற்கான பணிகள் துவங்கினால் இச்சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்படி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதன்காரணமாக தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் செல்லும் திட்டச்சாலையை தேனி அரசினர் ஐடிஐ வழியாக திருப்பி விட்டு, மதுரை சாலையை சென்றடையும் வகையில் சாலை அமைந்தால், ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடக்கும் போது அனைத்து பேருந்துகளையும் இப்புதிய திட்டச்சாலையின் வழியாக இயக்க முடியும். இதற்காக தேனி அரசினர் ஐடிஐ தங்களுக்கு சொந்தமான 88 சென்ட் நிலத்தை நகராட்சியிடம் ஒப்படைத்தது.

இந்நிலத்தில் தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் திட்டச்சாலைக்காக நகராட்சி நிர்வாகம் தார்ச்சாலை போட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இச்சாலையி்ல் சுமார் 100 மீட்டர் தூரமுள்ளபகுதி தனியார் வசம் உள்ளதால் இந்த திட்டச்சாலை நிறைவடையாமல் உள்ளது. தற்போது ரயில்வே மேம்பாலம் கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், இப்புதிய திட்டச்சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, தேனி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ஷஜீவனா இத்திட்டச்சாலை விவகாரத்தில் முழு கவனம் செலுத்தினால் விரைவில் இச்சாலைக்குள்ள தடை நீக்கப்பட்டு திட்டச்சாலை செயல்பாட்டுக்கு வந்தால் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப்பணி எவ்வித சிரமமும் இல்லாமல் நடக்கும் என்பதோடு, புதிய திட்டச்சாலையானது ஒருவழிப்பாதையாக மாற்றப்படும் சூழலும் ஏற்படும் என்பதால் முடங்கிக் கிடக்கும் இத்திட்டச் சாலையை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.