தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்கூட்டியே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1901ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தளவு அதிகமான வெப்பம் பதிவானதில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கும் நிலையில், இதை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடுமையான வெப்ப அலை உருவாக வாய்ப்பு!
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், இப்போதே பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்தியாவில் 1901-ஆம் ஆண்டுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு!
இந்நிலையில், மாநில அரசுகள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
மேலும், ”மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்துவருகிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெயில் பாதிப்புகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீர்சத்து குறைபாடு அதிகளவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்!-ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், முதியோர்கள் கர்ப்பிணிகள் பெண்கள் உள்ளிட்டோர் இந்த வெயில் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெயிலை சமாளிக்க கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். முதியவர்கள் வெயிலில் செல்லும்பொழுது மயக்கம், வாந்தி, சுயநினைவை இழத்தல் போன்றவை நேரக்கூடும். இதனால் அவர்கள் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் வயிற்று போக்கு உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வெயிலால் சின்னம்மை கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க கூடுமானவரை அனைவரும் இளநீர், மோர், வெள்ளரி உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டார். சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டும் தான் இந்த கொடிய வெப்பநிலையை எதிர்கொள்ள முடியும்.
– விக்னேஷ்முத்து மற்றும் ரமேஷ் குமார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM