நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்திய உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை நீதிமன்றம் விடுவித்ததது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி அன்று, 19 வயது பட்டியலின இளம்பெண் உயர் சாதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
ஆனால் படுகாயமடைந்த அந்த பெண், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். முன்னதாக அவரின் தனது இறுதி வாக்குமூலத்தில் தன்னை ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த சந்தீப்(22), லவகுஷ்(19), ராம்குமார்(28), ரவி(28) ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். மேலும் தனது தாய் மற்றும் சகோதரருடன் புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து வயல்வெளிக்கு தனது துப்பட்டாவால் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.
அங்கு சித்ரவதை செய்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அப்பெண் கூறினார். அதைத் தொடர்ந்து உத்தரபிரதேச போலீசார் சம்பந்தபட்ட நால்வர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், சித்திரவதையின் கொடூரமான அறிகுறிகளில், அந்தப் பெண்ணுக்கு பல எலும்பு முறிவுகள் மற்றும் நாக்கில் காயம் ஏற்பட்டது, 2012 நிர்பயா கூட்டுப் பலாத்காரத்திற்கு இணையாக இருந்தது என்று கூறினர்.
மேலும் அவரது கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் அவளை செயலிழக்கச் செய்ததாகவும், சுவாசிக்க சிரமப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவளைத் தாக்கியவர்கள் கழுத்தை நெரிக்க முயன்றபோது அவள் நாக்கைக் கடித்தாள் என்றும் கூறினர். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி நாடு முழுவதும் போரட்டங்கள் நடைபெற்றது. ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உபி பாஜக அரசு செயல்பட்டது சர்ச்சையை எழுப்பியது.
ஹத்ராஸ் சென்று செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு, இறந்த பெண்ணின் உடலை நள்ளிரவில் போலீசாரே எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகளின் சொந்த சமூகமான தாகூர் சமூகமும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் ஹத்ராஸ் வழக்கில் உபி நிதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மூவரை இன்று விடுவித்துள்ளது. ஹத்ராஸ் மாவட்ட நீதிமன்றம் முக்கிய குற்றவாளியான சந்தீப் தாக்கூர் சிறிய குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ளார், கற்பழிப்பு அல்லது கொலை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற மூன்று குற்றவாளிகளான சந்தீப்பின் மாமா ரவி மற்றும் அவர்களது நண்பர்கள் லவ் குஷ் மற்றும் ராமு ஆகியோர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.