ஈவிகேஎஸ் இளங்கோவன்: யார் இவர்? பெரியார் பேரனின் கதர் பாலிடிக்ஸ்!

வாரிசு அரசியல் என கேள்விப்பட்டிருப்போம். தந்தைக்கு பின் மகன், பேரன் என வழி வழியாக அரசியல் செய்வது. இங்கே மகனின் இழப்பால் தந்தை மீண்டும் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி
காங்கிரஸ்
எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. இதையடுத்து இவரின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் களமிறங்கினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இவருக்கு 75 வயதாகும் நிலையில் படிப்படியாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் காலச் சூழல் மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் சூழலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகமாக சென்று கொண்டிருக்கிறார். இவர் தந்தை
பெரியார்
ஈ.வெ.ராமசாமியின் பேரன்.

யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?

சரியாக சொல்ல வேண்டுமெனில் பெரியாரின் அண்ணன் மகன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். கிருஷ்ணசாமியின் மகன் ஈவிகே சம்பத் – சுலோச்சனா தம்பதிக்கு மகனாக பிறந்தவர். 21.12.1948ல் பிறந்து ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். இதையடுத்து ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, சென்னை மாநில கல்லூரி ஆகியவற்றில் படித்தார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் பாரம்பரிய குடும்பம் என்பதால் அக்கட்சியில் சேர்ந்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட தலைவர், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2014 முதல் 2017 வரை மாநிலத் தலைவராக இருந்தார். 1984ஆம் ஆண்டு முதல்முறை சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

மக்களவை தேர்தல்

அதன்பிறகு தேசிய அரசியலை நோக்கி நகர்ந்தார். 2004ல் கோபிசெட்டிபாளையம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வென்றார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக இருந்தார். இதையடுத்து வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர், ஜவுளித்துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

மீண்டும் எம்.எல்.ஏ

மீண்டும் 2009 மக்களவை தேர்தலில் ஈரோடு, 2014 மக்களவை தேர்தலில் திருப்பூர், 2019 மக்களவை தேர்தலில் தேனி ஆகியவற்றில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பிறகு அரசியலில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எம்.எல்.ஏவாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டது.

குவியும் வாழ்த்துகள்

ஒருமுறை எம்.எல்.ஏ, ஒருமுறை எம்.பி என மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மக்கள் பணி செய்ய மூன்றாவது முறை வாய்ப்பு தேடி வந்துள்ளது. இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி வரலட்சுமி. இளைய மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.