கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த நோய்த்தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பப்புவா நியூ கினியாவின் கிம்பே பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
ஜப்பானில் தன்பாலின திருமணங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை பாகுபாட்டின் வெளிப்பாடு இல்லை என்று அரசு தரப்பில் விளக்களிக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி (Mélanie Joly) G20 நாடுகளின் மாநாட்டில் பங்கு பெறுகிறார். கடந்த மாதம் கனட-இந்தியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா வந்த மெலானி, தற்போது மீண்டும் டெல்லி வருகிறார்.
சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கிறார்.
சிகாகோவின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் மேயரும் கறுப்பினத்தவருமான Lori Lightfoot, அந்த நாட்டில் நடந்த மறு தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த 40 ஆண்டுகளில் சிகாகோவில் ஒருவர் மறு தேர்தலில் தோல்வியைச் சந்திப்பது இதுவே முதன் முறை.
எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பேராசிரியர் ஹரி பாலகிருஷ்ணன், வயர்டு-வயர்லெஸ் நெட்வொர்க், மொபைல் சென்சிங் முறைகளில் தனது அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக மார்கோனி விருதைப் பெற்றார்.
இரானில் அணுசக்தி நிலையத்தில் வெடிகுண்டுகளின் தரத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்திருக்கிறது.
இரானில் பெண்கள் கல்வி கற்பதை எதிர்த்து, பெண்கள் கல்வி நிறுவனங்கள்மீது புகைக் குண்டுகள் வீசப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹாரி, அவர் மனைவி மேகன் இருவரும் இங்கிலாந்தின் வின்ட்சர் தோட்டத்திலுள்ள அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.