தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பேராசிரியர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்று தெரிவித்து அதனை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :-
“பேராசிரியர் கடந்த ஏழு மாதங்களாக எனக்கு தொடர்ந்து பாலியல் சார்ந்த துன்பங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அவர் ஆய்வு அறையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளிலும் மாணவர்கள் முகம் சுழிக்கும் வகையிலும் இரட்டை அர்த்தத்திலும் பேசி வருகிறார்.
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி அந்தக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் சின்னத்தாயிடமும் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு மூன்று பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாணவி ஏதேனும் தனிப்பட்ட உள்நோக்கில் புகார் அளித்துள்ளாரா? அல்லது பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதானா? என்று பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு உள்ளது.
புகார் தொடர்பாக விசாரணை குழு அளிக்கும் அறிக்கையை மேல் நடவடிக்கை எடுப்பதற்காக கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைப்போம். அதே சமயம் பாலியல் புகார் உண்மை என்று தெரியவந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.