ரூ.1.02 கோடி மதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் பே வார்டு: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி திறப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.1.02 லட்சம் கோடி மதிப்பீட்டில் பே வார்டுகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பன்னோக்கு மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் கொண்ட பே வார்டை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டணப் படுக்கை வசதி கொண்ட அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இதனை அனைத்து தரப்பு மக்கள் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் கடந்த நிதிநிலை அறிவிப்பின்போது மதுரை, கோவை, சேலம் மருத்துவமனைகளில் கட்டண மருத்துவ தொகுதிகளை (பே வார்ட்ஸ்) அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதன்படி, சேலத்தை அடுத்து மதுரையில் பே வார்டுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான அறுவை சிகிச்சை மையம் சிறப்பாக இயங்குகிறது. மொத்தம் 232 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 110 பேருக்கு இலவசவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மதுரையிலும், சென்னை எழும்பூரில் ரூ.2.50 கோடியில் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ரூ.1.33 கோடி செலவில் மதுரை கிழக்குத் தொகுதிக்குட்பட்ட ராஜாக்கூர், குமராபுரம், எள்கீழப்பட்டி, பெரியபூலான்பட்டி, வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வருமுன் காப்போம் திட்டம் முகாம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.