சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியிலுள்ள அகஸ்தியர்புரத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி வாழை, எலுமிச்சை விவசாயம் செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து அவரால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், தனது விவசாய நிலத்தில் நிலத்தை அய்யம்பாளையம் அருகேயுள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார்.
தனபால் விற்பனைசெய்த ஐந்து ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து பார்த்தபோது, இடத்தின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. இது குறித்து கருப்பையா, ராஜாக்கண்ணு என்பவருடன் சேர்ந்து தனபாலிடம் குறைவாக இருக்கும் இடத்துக்கு பணம் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், தனபால் தான் மறைத்து வைத்திருந்த டபுள் பேரல் துப்பாக்கியால் கருப்பையாவை வயிறு, தொடை பகுதிகளில் சுட்டிருக்கிறார்.
கருப்பையாவைக் காப்பாற்ற முயன்ற ராஜாக்கண்ணுவையும் தனபால் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையா, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த ராஜாக்கண்ணுவுக்கு சிறுமலை பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்றபோது தனபால் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாத் தலமான சிறுமலையில் நடந்த இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.