ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை-வனத்துறையினர் தகவல்

பொள்ளாச்சி :  ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், வனப்பகுதியில் தீ விபத்தை தவிர்க்க, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக வன கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இதில் டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சில மாதமாக தொடர்ந்து பெய்தது. அதன்பின் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மழை இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. வெயிலின் தாக்கத்தால், வனப்பகுதியில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் உதிர ஆரம்பித்துள்ளது. வனத்தின் பல பகுதிகளில், மரங்களிலிருந்து கீழே விழுந்த இலைகள் காய்ந்து சறுகுகளாக உள்ளது. டாப்சிலிப் மற்றும் பரம்பிக்குளம் செல்லும் வழித்தடங்கள், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி, நவமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து அதிகளவு இலைகள் உதிர்ந்துள்ளது. மேலும், நீர்நிலைகள் வறண்டு வருவதால் விலங்குகள் இடம் பெயர்கிறது.

இந்நிலையில் டாப்சிலிப் மற்றும் ஆழியார், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளது. வனங்களில் தீப்பிடிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதால், இலைகள் காய்ந்து சறுகுகளாக மாறியுள்ளது. நாளுக்கு, நாள் வெயிலின் தாக்கம் இருப்பதால் வனத்திற்குள் செல்லும் பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. புகைப்பிடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காட்டுத்தீயானது இயற்கையாக உண்டாவதில்லை. மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. வனப்பகுதிகளைக் கடந்திடும் போது புகைப்பிடிப்பதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்வதுடன், எரிந்திடும் தீக்குச்சிகளையும், புகைந்திடும் சிகரெட் மற்றும் பீடி துண்டுகள் போன்றவற்றையும் எறிந்திடுவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவேண்டும். வனப்பகுதிகளில் தீ ஏற்பட்டால், அதை பரவ விடாமல் தடுக்க வனத்துறையினருக்கு உதவ வேண்டும். வனப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களால் வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வனபகுதிக்குள் அத்துமீறி நுழையவோ அல்லது வனப்பகுதிக்குள் தீ வைப்பதோ தவிர்க்க வேண்டும். மீறி செயல்படுவோர் மீது 1882-ம் வருட வனச்சட்டம் மற்றும் 1972ம் வருட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காட்டில் தீயை பார்த்திடும் பொதுமக்கள் மண்ணை வாரிக்கொட்டியோ, பச்சை தாவரத் தழைகளை ஒடித்து தீயின் மீது அடித்தோ அல்லது நீர் நிலைகள் அருகில் இருந்தால் நீரை ஊற்றியோ தீயினை அணைத்திட வேண்டும். மேலும், தீ தொடர்பான விவரங்களை அருகிலுள்ள வனச்சரக அலுவலகத்திற்கோ அல்லது துணை இயக்குநர் அலுவலகத்திற்கோ எந்த நேரத்திலும் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தகவல் கொடுக்க வேண்டும்.

 வனப்பகுதிக்குள் விதி மீறி புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஆங்காங்கே நின்று சமையல் செய்யக்கூடாது. வனத்துறையின் விதி முறைகளை மீறி நடப்பவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையினர் கூறும் அறிவுரைகளை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.