நான் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். என் கணவர் பொறியாளர். பெற்றோர் பார்த்துவைத்த திருமணம். எங்களுக்கு இரண்டு மகள்கள். திருமணமான சில மாதங்களில், ’நீ ரொம்ப அழகா இருக்க.. நான் சுமாரா இருக்கேன், நீ என்னைவிட அதிகம் சம்பாதிக்கிற, உன் குடும்பம் எங்க குடும்பத்தைவிட பெரிய குடும்பம்னு திமிரா நடந்துக்க நினைக்காத’ என்று அவர் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், அவர் நினைத்ததுபோல் எல்லாம் நான் நடந்துகொள்ளவிலை. அவர் போகப் போக என்னைப் புரிந்துகொள்வார் என்று நினைத்தேன். ஆனால், அதற்குக் காரணம் நான் அல்ல, அவரது தாழ்வு மனப்பான்மை என்பது பிறகுதான் புரிந்தது.
ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் சண்டை போடுவது என்பது வாடிக்கையானது. ’பொண்ணுதான் பொறுத்துப் போகணும்’ என்று என் குடும்பத்தில் எனக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டதால் நானும் சகித்துக்கொண்டேன். எங்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பின்னர், தாழ்வு மனப்பான்மையோடு அவருக்கு இன்னொரு கொடிய நோயும் சேர்ந்துகொண்டது. அது… சந்தேகம். அதுவரை பார்த்த பிரச்னைகளை எல்லாம் சிறிய பிரச்னைகள் என்று உணரவைக்கும் அளவுக்கு இருந்தது இந்த சந்தேக புத்தி. உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள்… இவ்வளவு ஏன்… வீட்டுக்கு தண்ணீர் கேன் போட வரும் ஆணைக்கூட சந்தேகப்பட்டு பேசினார்.
அதற்கு முந்தைய பிரச்னைகளுக்கு எல்லாம் பொறுத்துப்போன நான், இதையும் பொறுத்துப்போனால் அவர் சொல்வது உணமையாகிவிடும் என்பதால், கடுமையான எதிர்வினையாற்றினேன். அவர் திருந்தவில்லை. ஒரு கட்டத்தில் அவர் என்னுடன் இல்லற வாழ்க்கையில் இருப்பதை நிறுத்துவிட்டார். என்றாலும் சந்தேகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னொரு பக்கம், அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். எக்கேடோ கெட்டுப் போகட்டும் என என் மகள்களுக்காக வாழ ஆரம்பித்தேன்.
இப்போது எனக்கு 42 வயதாகிறது. உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் சென்றபோது, இல்லற வாழ்க்கை பற்றிக் கேட்டார். நான் கூறினேன். பாலியல் தேவைகளிலிருந்து விலகி/விலக்கி வைக்கப்பட்டதுகூட என் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார். அதில் உண்மை இருப்பதை நானும் உணர்ந்தேன்.
இப்போது என் மூத்த மகள் கல்லூரியில் முதல் வருடமும், இளைய மகள் பள்ளி இறுதி வருடமும் படிக்கிறார்கள். என் கணவர் என்னை எவ்வளவோ கொடுமைகள் செய்தபோதும், என் மகள்களுக்கு அப்பா வேண்டும், நாளை அவர்களுக்குத் திருமணம் செய்யும்போது சபையில் அப்பா ஸ்தானத்தில் அவர் இருந்து செய்தால்தான் மரியாதை என்பதால்தான், என் கணவரை பிரிய இதுவரை நான் நினைக்கவில்லை. ஆனால், என் மகள்களுக்கு விவரம்தெரிய ஆரம்பித்ததில் இருந்தே, ‘அப்பாகூட இருக்கிறதைவிட, அப்பா இல்லாம தனியா இருந்தா நீங்க நிம்மதியா இருப்பீங்கனு தோணுதும்மா. எங்களுக்காக நீங்க எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டது போதும். நாம தனியா போயிடலாம். அவர் விரும்பினா, நாங்க மட்டும் அப்பப்போ போய் அப்பாவை பார்த்துக்குறோம்’ என்கிறார்கள்.
இப்போது எனக்கும் பிரிவு முடிவை நோக்கியே மனம் செல்கிறது. உடல்நலிவுற்றிருக்கும் இந்த வேளையில், வலிகளை தாங்கும் தெம்பு முன்னர்போல என்னிடம் இல்லை. ஆனால், எங்களுக்குள் தாம்பத்ய இடைவெளி இருப்பதை பலரும் அறிவர். என் கணவரே அதை பலரிடமும் சொல்லியிருக்கிறார். எனவே என் கணவரும், சிலரும்… என் முடிவுக்கு அதுதான் காரணம் என்று சித்திரித்துவிடுவார்களே என்று தோணுகிறது. இன்னொரு பக்கம்… அப்படியே சொன்னாலும் அது உண்மைதானே என்றும் மனசு அதற்குத் தயாராகிறது.
எந்த வகையிலும் சந்தோஷம் இல்லாத, நிம்மதி இல்லாத வாழ்க்கை எதற்கு எனக்கு? பிரிவு தவறா?