சேலம் – வீட்டை இடித்து சாலை அமைத்ததாக புகார் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டை இடித்து சாலை அமைத்ததா சேலம் மாநகராட்சி?

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மல்லிகா என்பவர் தனக்கு சொந்தமான 765 சதுர அடி வீட்டை இடித்து, பொது சாலை அமைத்ததாக சேலம் மாநகராட்சி மீது குற்றம்சாட்டி, மீண்டும் வீட்டை கட்டித் தரக் கோரி சேலம் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

அந்த வழக்கில் வீட்டை கட்டி தர வேண்டுமென கடந்த 2001ஆம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை நிறைவேற்றாததால், மாநகராட்சி ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சேலம் மாநகராட்சி ஆணையருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையர் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசு தரப்பில் மேல்முறையீடு

இதனையடுத்து, தண்டனையை ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேசமயம், மீண்டும் வீடு கட்டித் தர வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பொதுப் பாதை!

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, குறிப்பிட்ட அந்த நிலம் அரசுப் பொதுப்பாதை என்றும், மல்லிகாவிற்கு சொந்தமானது அல்ல என்றும் வாதிட்டார். அரசுப் பொதுப்பாதையை ஆக்கிரமித்த தவறான தகவலை மறைத்து மல்லிகா தமக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாகவும் வாதிட்டார்.

இரு உத்தரவுகளும் ரத்து!

எனவே சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.