விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும், புகழ்பெற்ற இக்கோயிலில் 1990-ல் கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் சாத்தூரப்பன் என்றழைக்கப்படும் வேங்கடாசலபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சாத்தூர் பொதுமக்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, கோரிக்கையைப் பரிசீலித்த அதிகாரிகள், வேங்கடாசலபதி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த ஆறு மாதங்களாக கோயிலில் வசந்த மண்டபம், சுற்று பிராகாரம், தூண்கள், கொடிமரம், விமானம், சிற்பங்கள், திருவீதி உலா வாகனங்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் கடந்த சில வாரங்களில் முடிவுற்ற நிலையில் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக யாகசாலை அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேங்கடாசலபதி திருக்கோயிலில் வியாழக்கிழமை முதல் சிறப்பு யாகசால பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக் கிழமையான நேற்று அதிகாலை விஸ்வரூபம் தரிசனம், கோபூஜை, கும்ப ஆராதனை, நான்காம் கால மஹா பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அறநிலையத்துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‘கோவிந்தா.. கோபாலா…’ கோஷம் எழுப்பி பக்தர்கள் வேங்கடாசலபதி தரிசனம் செய்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று நாள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.