டெல்லி ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவை, மதுபானக்கொள்கையில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். சி.பி.ஐ தரப்பில் சிசோடியாமீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மியும் பிற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வைச் சாடிவருகின்றன.
இத்தகைய சூழலில் மணீஷ் சிசோடியா, தன்மீதான வழக்கு பதிவை ரத்து செய்யக் கோரியும், சி.பி.ஐ காவலிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘இந்த வழக்கில் அனைத்து மீடெடுப்புகளும் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்றன. அதனால். தன்னை காவலில் வைத்திருப்பது எந்தப் புரயோஜனமும் இல்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னர் நீதிபதியிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “தினமும் காலை 8 மணி முதல் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை. அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களிலும் எதுவும் இல்லை. சிபிஐ அதிகாரிகள் எங்களை மதிக்கிறார்கள், ஆனால் 8-10 மணி நேரம் உட்கார்ந்து, அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது மன உளைச்சலாக இருக்கிறது.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மணீஷ் சிசோடியா ஜாமீன் விவகாரம் இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ அதிகாரிகள் மேலும் மூன்றுநாள் மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதனால், விசாரணை காவலை மூன்று நாள்களுக்கு நீட்டிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில், நீதிமன்றம் மேலும், 2 நாள்கள் மணீஷ் சிசோடியாவை விசாரிக்க காலத்தை நீடித்து உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.