சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். புதிய டிசைன்களைக் கேட்ட அந்தப் பெண்கள், அதைப் பார்த்திருக்கின்றனர். ஆனால் டிசைன்கள் பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அவர்கள் இருவரும் சென்றுவிட்டனர். இதையடுத்து அந்தப் பெண்கள் சென்ற பிறகு ஒன்றரை சவரன் தங்க வளையல் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து நகைக்கடை ஊழியர் மகேஷ் என்பவர், உரிமையாளர் ராஜேஷிடம் தகவலைத் தெரிவித்தார்.
பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பர்தா அணிந்த பெண்கள்தான் அந்த தங்க வளையலைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து ராஜேஷ், காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் மயிலாடுதுறை மாவட்டம், சூரைநாடு மேல்வட்டசரகு பகுதியைச் சேர்ந்த கவிதா, ஷீலா தேவி எனத் தெரியவந்தது. இதையடுத்து கவிதாவை போலீஸார் கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவத்துக்கு கவிதாவின் மகன் கௌதமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஷீலா தேவியை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து ஜாம்பஜார் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட் ட கவிதா மீது திண்டுக்கல், கள்ளகுறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகுள் நிலுவையில் உள்ளன. கவிதாவின் மகன் கௌதம் மீது கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. நகைக்கடையில் கண்டிப்பாக சிசிடிவி இருக்கும். அதில் தங்களின் முகம் பதிவாகமலிருக்க கவிதாவும் ஷீலா தேவியும் பர்தா அணிந்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் கவிதாவைப் பிடித்துவிட்டோம்” என்றனர்.