இலவசங்களை அடுக்கிய கெஜ்ரிவால் அடிக்கடி கர்நாடகா வருவதாக அறிவிப்பு| Kejriwal, who has piled up freebies, has announced that he is visiting Karnataka frequently

தாவணகெரே : பா.ஜ., அரசை கண்டித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாவணகெரேவில் நேற்று பிரசாரம் செய்தார். கர்நாடகாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், கல்வி, மருத்துவம், வீட்டில் ஒருவருக்கு வேலை, வேலை இல்லாதோருக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை என பல அறிவிப்புகளை அறிவித்தார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் இம்முறை 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அக்கட்சி தலைவர்கள் அறிவித்தனர். தொகுதிகளில் அக்கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று பிரசாரத்துக்காக தாவணகெரே வந்தனர்.

கமிஷன் அதிகரிப்பு

அங்கு நடந்த ஆம் ஆத்மி பிரசார மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

கர்நாடகாவில் இதற்கு முன் 20 சதவீதம் கமிஷன் பெறும் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தற்போது டபுள் இன்ஜின் அரசுகள் வந்த பின், இரண்டு மடங்களாக 40 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர்.

மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 80 சதவீதம் கமிஷன் பெறுவர். கர்நாடகா மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒரு எம்.எல்.ஏ., வீட்டில் எட்டு கோடி என்றால், மற்றவர்கள் எவ்வளவு ஏப்பம் விட்டிருப்பர் என்று யோசியுங்கள்.

இம்மாநில மக்கள் படிப்பறிவு உள்ளவர்கள், புத்திசாலிகள், நாட்டுப்பற்று மிக்கவர்கள். ஆனால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் மட்டும் சரியில்லை.

விவசாயிகள் தற்கொலை

பா.ஜ., அரசு 40 சதவீதம் கமிஷன் பெற்று, கர்நாடகாவின் மானத்தை தேசிய அளவில் பாழ் செய்துள்ளனர். மஹாராஷ்டிராவுக்கு பின், கர்நாடகாவில் தான் கடன் செலுத்த முடியாமல் அதிகபட்ச விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் அனைத்து விதமான கடனும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

இலவச மின்சாரம், கல்வி, மருத்துவம், வீட்டில் ஒருவருக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலை இல்லாதோருக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஹுப்பள்ளியில் தனியார் ஹோட்டலில், கட்சி பிரமுகர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் முடியும் வரை அடிக்கடி கர்நாடகா வருவதாக தெரிவித்துள்ளார்.

ஊழலில் மூழ்கிய எம்.எல்.ஏ.,க்கள்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், ”விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால், கர்நாடகா அரசு அமல்படுத்தியுள்ளது. பழைய பென்ஷன் முறை அமல்படுத்தும்படி அரசு ஊழியர்கள் போராடுகின்றனர். பஞ்சாபில் பழைய முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் ஒன்றே. ஆனால் கர்நாடகாவில் எம்.எல்.ஏ.,க்களே ஊழலில் மூழ்கியுள்ளனர்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.