இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களுக்கு பின்னர் பாலா-சூர்யா கூட்டணியில் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ‘வணங்கான்’ படத்தின் மூலம் பாலா மற்றும் சூர்யா இணையப்போவதாக செய்திகள் வெளியானது. பல வருடங்கள் கழித்து இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பெருகியது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது, கன்னியாகுமரி மற்றும் இந்தியப் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார் மற்றும் இந்த படத்தின் மூலம் நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 40 நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் பணிகள் கைவிடப்பட்டது. இந்த படத்தின் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு தகுந்ததாக இல்லை என்பதால், இயக்குனர் பாலாவும், நடிகர் சூர்யாவும் நட்பு ரீதியாக பேசி முடிவெடுத்த பின்னர் சூர்யா இந்த படத்திலிருந்து விலகினார். இருப்பினும் நந்தா மற்றும் பிதாமகன் போன்ற மற்றொரு படத்தில் இணைவோம் என்றும் இயக்குனர் பாலா கூறியிருந்தார். சூர்யா மற்றும் பாலா இணைந்து வணங்கான் படத்தை தயாரித்து வந்த நிலையில், படத்தை தனியாக தயாரிக்கப்போவதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. அதன்படி இப்போது வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்த பாலசுப்ரமணியம் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் பணியாற்றப்போவதாக செய்திகள் வெளியானது. தற்போது ‘வணங்கான்’ படத்தின் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளது, வரும் மார்ச் 9ம் தேதி முதல் கன்னியாகுமரி பகுதியில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கூடிய விரைவில் படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவலை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.