சென்னை: திறமை இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி, பழனிசாமியுடன் மோதிப் பார்க்கட்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர்கட்டிக்காத்த அதிமுகவை அழிக்க சதித் திட்டம் தீட்டியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அதிமுகவைகாக்க போராடி வரும் பழனிசாமியை, தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
அதிமுகவை திமுகவிடம் அடகு வைக்கவும், தனித்தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற பன்னீர்செல்வத்திடமிருந்து கட்சியை மீட்டெடுத்தவர் பழனிசாமி. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் அரசை எதிர்த்து வாக்களித்து, துரோகம் செய்த பின்னர், பதவி சுகத்துக்காக தேடிவந்த பன்னீர்செல்வத்தை அரவணைத்து, துணை முதல்வராக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் பழனிசாமி.
தன் மகனை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் வாசிக்கச் செய்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்னர்தான், அவரிடமிருந்து அதிமுகவைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பழனிசாமி ஈடுபட்டார். அதனால்தான், ஒட்டுமொத்த அதிமுகவும் பழனிசாமியின் பின்னால் அணிவகுத்து நின்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி ரூ.360 கோடி செலவிட்டு, நம்மிடமிருந்து தட்டிப் பறித்த வெற்றியை, துரோகி ஓபிஎஸ் கொண்டாடுவது வேதனை அளிக்கிறது.
இடைத்தேர்தலில் முறையாக ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்த முடியாதவர், அவராலேயே குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவைச் சேர்த்தால்தான் இயக்கம் வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க தொடர்ந்து முயன்று வருகிறார்.
ஓபிஎஸ்-க்கு தகுதி, திறமை இருந்தால் தனிக்கட்சி தொடங்கி, பழனிசாமியுடன் அரசியல் ரீதியாகமோதிப் பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனித தாக்குதலில் ஈடுபட்டால், கைகட்டி வேடிக்கைப் பார்க்க உண்மையான அதிமுக தொண்டர்கள் கோழைகள் அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.