சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கு சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார்.
கவுரவ டாக்டர் பட்டம்
குறிப்பாக இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஈரோடு மகேஷ், யூ-டியூப் பிரபலங்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் பெற்று கொண்டனர். இந்த பட்டம் உண்மையானதா? இல்லை போலியா? என்ற சந்தேகம் எழுந்தது. தனியார் அமைப்பு ஒன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி அரங்கை முன்பதிவு செய்து விருது வழங்கியது?
சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம்
ஒருவேளை இந்த பட்டமே அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியது தானா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுபற்றி விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், எங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரங்கு மட்டுமே வாடகைக்கு விடப்பட்டதாக தெரிவித்தது. இந்த விழாவிற்காக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.
போலீசில் புகார்
உடனே கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும், மாம்பலம் காவல் நிலையத்தில் வள்ளிநாயகம் சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு யாருடையது என விசாரிக்கப்பட்டது. அதில் அமைப்பின் இயக்குநர் ராஜு ஹரிஷ் என்று கண்டறியப்பட்டது.
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது ஹரிஷ் தலைமறைவானது தெரியவந்தது. உடனே தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விருது வழங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை.
மனு தள்ளுபடி, அதிரடி கைது
அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், விருது பெற்ற பிரபலங்களுக்கும் தொடர்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்ட வந்த ஹரீஷ் மற்றும் இடைத்தரகர் கருப்பையா ஆகியோர் ஆம்பூர் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.