நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச்சென்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மனோஜ் குமார்(22) நாமக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மனோஜ் குமாருக்கும், அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனோஜ் குமார் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மனோஜ் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மனோஜ் குமார் ஓசூர் பகுதியில் மாணவியுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பள்ளி மாணவியை மீட்டனர். மேலும் மனோஜ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.