சென்னை லயோலா கல்லூரியின் சமூக நலத்துறையும், பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனமும் (Indian social Institude) இணைந்து `புலம்பெயர்வு- சொல்லப்படாத கதைகள் (UNTOLD STORIES OF DISTRESS MIGRATION)’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. இரண்டு நாள்கள் நடந்த இந்தக் கருத்தரங்கை `நர்மதா பச்சா அந்தோலன்’ நிறுவனரும் சமூகப்போராளியுமான மேதா பட்கர் தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கின் முதல்நாள், ஸ்கார்ஃப் (scarf) மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் தாரா, மூத்த மனநல மருத்துவர் அரவிந்தன், ‘மனசு’ அமைப்பின் இயக்குநர் சூசை ஆண்டனி ஆகியோர் அடங்கிய குழுவினரின் விவாதம் நடைபெற்றது. ஜேசுட் மைகிரன்ட் சர்வீஸ் (Jesuit migrant service) அமைப்பைச் சேர்ந்தவர்கள், வடமாநில தொழிலாளர் சஞ்சய், வாய்ஸ் ஃபரம் ஹார்ட் (voice from heart) அமைப்பின் நிறுவனர் லிதியா, இந்திய சமூக நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் செல்வின் ராஜ், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமு மணிவண்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
மேதா பட்கர் பேசுகையில், “புலம்பெயர் தொழிலாளர்கள் அபார்மென்ட்டில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வீடு மிகவும் குறுகியதாக, சமைக்கக்கூட வழியில்லாமல் தண்ணீர் ஒழுகக்கூடியதாக இருக்கிறது. கொரோனா காலங்களில் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து இல்லாத காரணத்தால் பல மைல் தூரம் இந்தத் தொழிலாளர்கள் நடந்தே சென்றார்கள். ஒரு பெண் பெருஞ்சுமையை தன் தோளில் சுமந்து சைக்கிளில் தந்தையையும் சுமந்து கொண்டு தன் சொந்த மாநிலத்துக்குச் சென்ற காட்சி மனதைக் கலங்க வைத்தது.
இன்று எக்கச்சக்கமான தொழிலாளர்கள், அமைப்பாக ஒருங்கிணையாமல் இருக்கிறார்கள். இதற்கு தொழிலாளர்களே பொறுப்பேற்க முடியாது. காரணம், அவர்கள் பாதுகாக்கப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால், இதுபோன்ற புலம்பெயர் பிரச்னைகளை கையிலெடுக்க அரசியல் கட்சிகள் தயங்குகின்றனர். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் இப்பிரச்னைகளைக் கையில் எடுக்க வேண்டும். சமூக நலத்துறை படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் இதனை சம்பளத்திற்கான வேலையாக மட்டும் பார்க்காமல் உணர்வுபூர்வமாக மக்களுக்காகச் செயல்பட வேண்டும்” என்றார்.
இந்திய சமூக நிறுவனத்தைச் சேர்ந்த செல்வின் ராஜ் பேசுகையில், “புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை இரண்டாக வகைப்படுத்தலாம். தெற்கிலிருந்து வடக்கிற்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள் பெரும்பாலும் சிறந்த வாய்ப்புகளை நோக்கிச் செல்பவர்கள். ஆனால் வடக்கில் இருந்து தெற்கிற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கட்டாயத்தால் புலம்பெயர்ந்தவர்கள். கொரோனா காலங்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், தன் சொந்த ஊர்களுக்கு விமானங்களில் வந்தனர். அதுவே இந்தியாவுக்குள் வேறு மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தன் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாகச் சென்றனர். இவ்விரு சம்பவங்களை ஆராய்ந்தால் ஏற்றத்தாழ்வுகள் புரியும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தும் குரல்கள் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
ஜேசுட் மைகிரன்ட் சர்வீஸ் (Jesuit migrant service) அமைப்பைச் சேர்ந்த அருள் ஹென்றி வில்லியம் பேசுகையில், “தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணற்ற பிரச்னைகளை நித்தம் சந்திக்கின்றனர். அவர்கள் மிகவும் அழுக்கான, கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்கின்றனர். மிகவும் நலிவடைந்த மக்களை பிள்ளை பிடிப்பவர்களாகவும், சமூக விரோதியாகவும் பார்க்கின்றனர். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது” என்றார்.
ஸ்கார்ஃப் (scarf) மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் தாரா, மூத்த மனநல மருத்துவர் அரவிந்தன், ‘மனசு’ அமைப்பின் இயக்குனர் சூசை ஆண்டனி ஆகியோர் பங்கேற்ற குழு விவாதத்தில் `புலம்பெயர் தொழிலாளர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை’ குறித்து விவாதிக்கப்பட்டது.