தமிழகத்தில் மெகா மோசடிக்கு 22,000 சிம்கார்டு கொடுத்த ஜியோ- ஏர்டெல் மேலாளர்கள் கைது..! செல்போன் எஸ்.எம்.எஸ்ஸில் பணம் பறித்த கும்பல்

வங்கிக்கணக்கில் ஆதாரை இணைப்பதாகவும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களின் ஓடிபியை பெற்று வங்கிக்கணக்கில் இருந்து  லட்சக்கணக்கில் பணத்தை திருடிய மெகா மோசடிக் கும்பலை கோவையில் தட்டித்தூக்கி உள்ளனர் சிவகங்கை போலீசார். 22 ஆயிரம் சிம்கார்டுகளை வழங்கி  மோசடிக்கு உதவியதாக  ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன மேலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மானாமதுரை பகுதிகளைச் சேர்ந்த சிலரது செல்போன்களுக்கு வங்கிக்கணக்கில் ஆதாரை இணைப்பதாகவும், வங்கி கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி எஸ்.எம்.எஸ் மூலம் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்கை தொட்டு தங்கள் வங்கி ஐ.டி (ID) மற்றும் வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்தோருக்கு ஆன்லைனில் உதவுவது போல நடித்து ஓடிபியைப் பெற்று அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டதாக 10க்கும் மேற்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த மோசடி கும்பலை பிடிக்க சிவகங்கை மாவட்ட எஸ்.பி செல்வராஜின் நேரடிக் கண்காணிப்பில் சைபர் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ் வந்த செல்போன் நம்பரின் முகவரியை தேடிச்சென்றபோது அந்த முகவரியில் இருக்கும் நபரின் அடையாளச் சான்றை பயன்படுத்தி வேறு நபர்கள் போலியாக சிம்கார்டு பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சிம்கார்டு பயன்படுத்தப்பட்ட செல்போனின் இருப்பிடத்தை டவர் லொகேஷன் மூலம் கண்டுபிடித்த போலீசார், கோவை பீளமேட்டை சேர்ந்த சிக்கா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த ஒரே செல்போனில் 40க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும், அதேபோல நூற்றுக்கணக்கான செல்போன்களை அவர்கள் பயன்படுத்தி வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது

இதற்காக 5 பெண்களை வேலைக்கு அமர்த்தி … நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேருக்கு மோசடியாக குறுந்தகவல் அனுப்பி வந்ததையும் கண்டறிந்தனர் .

2018 ஆம் ஆண்டுமுதல் இந்த மோசடியை அரங்கேற்றி வந்த சரவணன், அவரது மனைவி பாரதி உள்ளிட்டோரை பிடித்து விசாரித்த போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவன சிம்கார்டு விற்பனை செய்யும் டீலர்களின் ஏரியா மேலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து வாடிக்கையாளர்களின் முகவரியில் போலியாக ஆயிரக்கணக்கில் சிம்கார்டுகளை பெற்றது தெரியவந்தது.

கோவையைச் சேர்ந்த ஜியோ சிம்கார்டு நிறுவன மேலாளர்கள் ராம்குமார், வினோத்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சானவாஸ், உமர்முகமது, பரத்பாலாஜி, திருச்சி ஜெயராம், தூத்துக்குடி மாரீஸ்வரன், பொள்ளாச்சி சந்தோஷ்குமார், தென்காசி மூர்த்தி ஆகிய சிம்கார்டு விற்பனையாளர்களையும் தட்டித் தூக்கினர்.

இவர்கள் 6 ஆயிரம் சிம்கார்டுகளை இந்த மோசடிக் கும்பலுக்கு வழங்கியதாகவும், ஜியோ சிம்கார்டில் தினமும் 100 எஸ்.எ.எஸ்.கள் இலவசம் என்பதால் இந்த மோசடிக் கும்பல் அதிக அளவில் ஜியோ சிம்கார்டுகளையும் போன்களையும் பயன்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். சரவணனுக்கு மோசடி லிங்கை அனுப்பி பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுப்பது டெல்லியை சேர்ந்த சையது ரஹீப் குர்ஷீத் என்பது தெரியவந்ததையடுத்து அவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கோவையில் செயல்பட்ட இந்த மோசடி நிறுவனத்தில் இருந்து 22,735 ஜியோ சிம்கார்டுகள் , 24 ஏர்டெல் சிம் மோடம் பாக்ஸ், 292 செல்போன்கள் ,11 லேப்டாப்கள், 19 கம்யூட்டர்கள், 9 ஏடிஎம் கார்டுகள், 9 காசோலைப் புத்தகங்கள், ((20 ))மேஜைகள்- ((5)) சேர்கள் என ஒட்டு மொத்த அலுவலகத்தையும் துடைத்து சிவகங்கைக்கு எடுத்து வந்தனர் தனிப்படை போலீசார்.

செல்போன்களில் வரும் இது போன்ற குறுந்தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரித்த தென்மண்டல சரக டிஐஜி துரை , சிறப்பாக துப்புதுலக்கி மோசடி கும்பலை பிடித்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.