புதுடெல்லி: 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மொகமது முக்தர் அலி என்பவர், ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசினார். மேலும் பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆனந்த் பர்பாத் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முக்தர் அலியைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் முக்தர் அலியை, நீதிபதி ஷுபம் தேவதியா வழக்கிலிருந்து விடுவித்து அண் மையில் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது. வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க உதவும் பிசிஆர் படிவத்தை (போலீஸ் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வரும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் படிவம்) அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அந்த படிவம் மூலம்தான் தொலைபேசியில் என்ன பேசினார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த படிவத்தைத் தாக்கல் செய்ததால் வழக்கு வலுவிழந்துவிட்டது.
வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு நீதிபதி அதில் கூறியுள்ளார்.