வட மாநில தொழிலாளர்கள் எந்தமான அச்சமும் இல்லாமல் இருக்கலான் என்றும் காவல்துறை எப்போதும் அவர்களுடன் இருக்கும் என்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மணியாச்சி டிஎஸ்பி நம்பிக்கை அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோவை தொடர்ந்து, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு அடுத்து வருகிறது. குறிப்பாக காவல்துறை மூலமாக வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய வட மாநில தொழிலாளர்களிடம் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் குறைகளை கேட்டு அறிந்தார்.
மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழக அரசும் காவல் துறையும் உங்களுடன் இருக்கிறது.’ என்று கூறினார்.
‘அனைவரும் விதிமுறைகளுடன் பணிபுரிய வேண்டும். எந்த பிரச்சனை இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். காவல்துறை உங்கள் நண்பன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இ
இந்த நிகழ்ச்சியில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் சீதாராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இந்தி பேசுவதால் அடித்துக் கொல்லப்படுவதாக ஒரு வதந்தி கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிகார் மாநில பாஜக இதனை மிகப்பெரிய ஆயுதமாக வைத்து தமிழகத்துக்கு எதிரான ஒரு பெரிய சதியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.