சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளனவா என்பது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னையில் தனியா் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க எந்த முடிவும் செய்யப்படவில்லை. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யபட்டு அறிக்கை பெறப்படும்.
அறிக்கையை ஆய்வு செய்து, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சாதகமான முடிவுதான் எடுக்கப்படும். இந்த அறிக்கை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும். கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. உலக வங்கி இந்த கருத்துரையை வழங்கி உள்ளது.
எந்த பதற்றமும் தேவை இல்லை. ஆலோசகர் அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தான் எதிர்கால நடவடிக்கை இருக்கும். ஏற்கனவே இயங்கும் பேருந்துகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகையில் எந்த பாதிபபும் இருக்காது.
இந்த முறை டெல்லியிலும், கேரளாவிலும் நடைமுறையில் உள்ளது. இந்த மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கும் நிலை இருந்தது. இது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்ட பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான் இந்த டெண்டர் கோரப்பட்டது. எனவே அதிமுக இந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என கூறினார்.