தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகளாக இருக்கும் வட மாநிலத்தவர்கள், தமிழர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இதுபற்றி, ‘அப்படி எங்கும் நடக்கவில்லை. அது வதந்தி’ என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது பற்றி கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அந்தப் பதிவில் ஜோதிமணி, “பா.ஜ.கவின் எந்தவொரு அமைப்பும் தனித்து இயங்குவதில்லை. ஒட்டுமொத்த செயல் (சதி) திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவை இயங்கும். பீகார் பா.ஜ.க தமிழ்நாட்டின் மீது, வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது, திட்டமிட்ட சதி செயலின் ஒருபகுதியே. இதையொட்டி, தமிழகம், பீகார் இரண்டு மாநிலங்களிலும் பதற்றத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம்.
இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு எதிரான வலுவான கூட்டணி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க இங்கே வெற்றிபெற முடியாது. தமிழக பா.ஜ.க நிச்சயம் இந்தச் சதிசெயலுக்கு துணை நிற்கும். இதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்காமல், நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட்ட ஒரு சதிசெயலாகவே அணுகவேண்டும். சில கைதுகளோடு கடந்து போய்விடாமல், தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சதிசெயலில் ஈடுபட்டிருப்பவர்களை இரு மாநில அரசுகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
தமிழ்நாடு, பீகார் மக்கள் வதந்திகளை நம்பாமல், இரு மாநிலங்களிலும் பதற்றத்தை, வன்முறையை விதைக்கும் பா.ஜ.கவின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இரண்டு மாநிலங்களிலும் அனுபவம் மிகுந்த, பொறுப்பான முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். பதற்றம் கொள்ளத் தேவையில்லை. குறிப்பாக, வாட்ஸ்அப் வதந்திகளை நம்பவேண்டாம். அமைதிப் பூங்காவான நமது மாநிலத்தை அவமதிக்கும், வன்முறையை விதைக்கும் பா.ஜ.க-வுக்குச் சரியான பாடம் புகட்டுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.