தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கபட்டதாக வந்த தகவல்களை ஆய்வு செய்து, விவரங்களை சேகரித்து தமிழக ஆளுநரிடம் இன்று வழங்க உள்ளதாக லோக் ஜனசக்தி கட்சி தேசிய தலைவர் சிராக்பஸ்வான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் சிராக் பாஸ்வான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தான் வந்திருப்பதாகவும், பீகார் மாநிலத்தில் இருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் அச்சுறுத்தல் இருப்பது மிக வேதனையை அளிக்கிறது என்றும் கூறினார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் எங்கள் மக்களுக்கு முறையான வேலை வாய்ப்பு அளித்திருந்தால் மாநிலம் விட்டு மாநிலம் வர வேண்டிய அவசியம் இருக்காது என்று குற்றம் சாட்டிய அவர், பொய்யான வீடியோக்களை பரப்புவர்கள் மீது முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் மக்கள் தமிழக்கத்தில் அச்சமின்றி பணிபுரிய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சமூக வளைதளங்களில் பரப்பபடும் வீடியோக்கள் பொய்யானவை எனில் அந்த வீடியோக்களை பரப்புவர்கள் மீது தமிழ முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
‘என் மாநிலத்தை சார்ந்த மக்கள் கூறுவதை நான் முழுமையாக நம்புகிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் வேலை பார்த்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டும் குறுஞ்செய்தி அனுப்பியும் தமிழகத்தில் தாங்கள் அச்சுறுத்தபடுவதாக கூறி கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நான் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளியுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறேன்.
தமிழகத்தில் தாக்கபட்டது உண்மை என என்ககு தொடர்ந்து அழைப்பு வந்ததன் பெயரிலேயே இன்று தமிழகம் வந்துள்ளேன். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கபட்டதாக வந்த தகவல்களை சேகரித்து தமிழக கவர்னரிடம் இன்று வழங்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் தன்னை சந்திக்க வந்திருந்த பீகார் மாநில பணியாளர்களை சந்தித்து அவர்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்.