அரசியல் அரங்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சீமானும் நேரிடையாக உரசி கொள்வதில்லை என்ற பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் இப்படியெல்லாம் சொல்லப்படுகிறது.. ”இரு கட்சிகளின் அரசியல் எதிரி திமுக தான்… ஆகையால், இவர்கள் இருவரும் மோதிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதில்லை… சில நேரங்களில் கருத்தியல் ரீதியான மோதல்கள் வரும் ஆனால் அது பெருசாகாது” என்று அரசியல் பேசுபவர்கள் சொல்கிறார்கள்..
ஆனால், திமுக தரப்பில்
நாம் தமிழர்
கட்சி பாஜகவின் ”பி” டீம் என்று கூறுகின்றனர்.. மேலும், தேர்தல் நேரத்தில் இதை சொல்லியே நாம் தமிழர் கட்சியை சீண்டுவது திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது சீமானை அண்ணன் என்றும் அதுபோல அண்ணாமலையை தம்பி என்றும் இருவரும் சொல்லிக்கொள்கின்றனர்..
கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில்
சீமான்
பிரச்சாரம் செய்தபோது அண்ணாமலையை ஒரு பெருமைமிக்க கன்னடர் என்றும் அவர் ஒரு ஆட்டுக்குட்டி என்றும் கடுமையாக விமர்சித்தார். இருப்பினும், சீமான் மீது அண்ணாமலைக்கு மரியாதை இருப்பதாகவும் விமர்சனத்தின்போது கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்றும் பார்க்கின்றனர். இந்த நிலையில், சீமான் அண்ணனை போல பேசக்கூடாது என்று இருந்த என்னை கடைசியில் பேச வைத்துவிட்டீர்கள் என்று அண்ணாமலை கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அண்ணாமலை, தலைவரே இந்த இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர்றது ரொம்ப ரொம்ப கஷ்டம் தலைவரே… நானும் தொண்டை கிழிய காலேஜ் காலேஜா மைக்க புடிச்சி கத்துறேன்.. ஆனா ஒரு யூசும் இல்ல… அப்படி வந்த சில தம்பிகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்ததை பார்த்து ஓடி விட்டார்கள்… என்னன்னே இப்படிலாம் பண்றாங்க தேர்தல்ல என்று கேட்டார்கள்.. ”தம்பி காத்திருங்க எல்லாம் ஒருநாள் மாறும்.. புதிய அரசியலை முன்னெடுப்போம் என்று சொன்னேன் ஆனாலும் முடியல. நானும் பாஜக என்ற கட்சியில் இருந்தாலும் சொல்கிறேன், இந்த தேர்தலில் நடக்கும் அரசியலை மாத்தவே முடியாது… திருத்தவே முடியாது… கடைசில என்னையும் சீமான் அண்ணனை போல பேச வெச்சிட்டீங்க… என அண்ணாமலை கூறினார்.