தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து, மினி லாரி மற்றும் தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வருசநாடு-தேனி சாலையில் வெள்ளிமலையிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்தி சொல்ல முயன்றுள்ளனர்.
இந்நிலையில் திடீரென பைக்கில் ஒரு பெண் குறுக்கே வந்ததால், அவர் மீது மோதாமல் இருக்க தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அப்பொழுது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. பின்பு அப்பகுதியில் இருந்த மினிலாரி மீது மோதி பேருந்து நின்றது. இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அரசு பேருந்து முன்பகுதி சேதமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.