மதுரையில் நடந்த மூத்தோர் இறகுபந்து விளையாட்டு:ஈரோடு வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

ஈரோடு

மதுரையில் நடந்த மூத்தோர் இறகு பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

இறகுபந்து போட்டி

தமிழ்நாடு இறகுபந்து கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான மூத்தோர் இறகுபந்து சாம்பியன் கோப்பை போட்டி மதுரையில் நடந்தது.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வயது பிரிவுகளின் படி தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஈரோட்டை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு வீரர்கள்

ஈரோடு நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமியின் சார்பில் பங்கேற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று உள்ளனர். இதில் ஈரோடு சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் எஸ்.சந்திரசேகரன் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் விளையாடி இரட்டையர் பிரிவில் முதல் இடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் எஸ்.ஏ.கணேஷ்குமார் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பிடித்தார். நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமி பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் 45-வயது பிரிவில் இரட்டையர் பிரிவில் முதல் இடமும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தார். இன்னொரு வீரர் ஏ.உமாசங்கர் 50 வயது பிரிவில் இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்தார்.

தேசிய போட்டிக்கு தேர்வு

இதில் வீரர்கள் சுமங்கலி சில்க்ஸ் எஸ்.சந்திரசேகரன், கே.செந்தில்வேலன், ஏ.உமாசங்கர் ஆகியோர் வருகிற 19-ந் தேதி கோவாவில் நடக்கும் தேசிய இறகுபந்து மூத்தோர் சாம்பியன் கோப்பை போட்டியில் நேரடியாக பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்ற ஈரோடு வீரர்களுக்கு ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் செல்லையன் என்கிற ராஜா, செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.