திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்த 12 பேர் ராஜஸ்தான் காவல் துறையால் லஞ்சப் புகார் காரணமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த சோனியா என்ற பெண்ணையும் பன்னாலால் என்ற அவரது கணவரையும் திருச்சி போலீஸார் தேடி வந்தனர்.
திருட்டு கும்பலை தேடி திருச்சியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. ஹஜ்மர் நகரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த தம்பதி ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் திருட்டு வழக்கு தொடர்பாக 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகாரில் கூறியுள்ளது.
இந்த லஞ்ச புகார் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் பினாய் காவல் நிலைய எல்லைப் பகுதியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனிப்படை போலீஸ் 12 பேரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்ததாக ராஜஸ்தான் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு போலீஸ் ராஜஸ்தான் போலீஸிடம் இது தொடர்பாக பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.