தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி!
இது தொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன மோசடிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வருகிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இந்நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்பதும், சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது. எனவே இத்தகைய போலியான நிதி நிறுவனங்களின் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்திட வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பத்தாயிரம் கோடி ரூபாய் பகல்கொள்ளை!
அண்மையில் தமிழகத்தின் வட மாவட்டங்களை மையமாக வைத்து இயங்கி வந்த ஆரூத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், விஆர்எஸ் எனும் பெயரில் இயங்கி வந்த போலி நிதி நிறுவனங்கள் சுமார் ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமாக மக்களிடம் கொள்ளையடித்ததோடு நிறுவனங்களையும் மூடிவிட்டு சென்று விட்டனர். இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இந்நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களின் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் தங்கம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளை காட்டி லட்சக்கணக்கான மக்களை இந்நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன.
அண்ணாமலைக்கும் ஆருத்ராவுக்கும் என்ன சம்மந்தம்?
தொடக்கத்தில் மாதாந்திர சீட்டு நடத்துவதாக கூறி அரசிடம் உரிமம் பெறும் நிறுவனங்கள் நாளடைவில் இத்தகைய சட்ட விரோத மோசடிகளில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வருவது வழக்கமாக உள்ளது. இத்தகைய போலியான நிதி நிறுவனங்களுக்கு ஒரு சில அதிகாரிகளும், அரசு பொறுப்பில் உள்ளவர்களும் துணை நிற்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆரூத்ரா நிறுவனத்திடம் பாஜக தலைவர் அண்ணாமலை பணம் பெற்றதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்!
எனவே, இத்தகைய போலி நிதி நிறுவனங்களின் மீது உறுதியான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதோடு, மோசடி நிறுவனங்களுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல அந்நிறுவனங்களுக்கு சொந்தமான நேரடியான மற்றும் பினாமி சொத்துக்கள் அனைத்தையும் உடனடியாக பறிமுதல் செய்வதோடு, பணத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
மேலும் ஆங்காங்கே புதிதாக துவங்கப்படுகிற இத்தகைய போலியான நிறுவனங்களை துவக்கத்திலேயே கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை உடனடியாக முடக்குவதற்கான அனைத்து விதமான உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.