ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு மாற்று வழிகளை ஆலோசிக்க வேண்டும்: வேல்முருகன்

சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள், கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. மாணவர்கள், இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் அநாதைகளாக நிற்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்திருப்பது சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி 6 மாதங்கள் ஆன நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது தமிழ்நாடு அரசையும், மக்களையும் இழிவுப்படுத்தும் செயல்.தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு, இன்றுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஆன்லைன் சூதாட்டமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது என்ற அடிப்படை புரிதலுமின்றி, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன். அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.