புதுகை அருகே 2 இடங்களில் ஜல்லிக்கட்டு 1400 காளைகளுடன் 450 வீரர்கள் மல்லுக்கட்டு

ஆலங்குடி: புதுக்கோட்டை அருகே மங்களாபுரம், அன்னவாசலில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,400 காளைகள் சீறி பாய்ந்தன. 450 வீரர்கள்  போட்டி போட்டு காளைகளை அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மங்களாபுரம் பட்டவன் மற்றும் பொற்பனை முனீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் உதயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 40 பேர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக களத்தில் பல காளைகள் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், ஷோபா, மிக்சி, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. விராலிமலை அன்னவாசல் தர்மசவர்த்தினி கோயில் மாசிமக திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று கோயில் திடலில் நடந்தது.

இதில் புதுகை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநிலங்களவை எம்பி அப்துல்லா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சேர், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.