தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் படையெடுப்பால் அரசியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை குறித்து நாம் தமிழர்
சீமான்
தொடர்ந்து மேடை பிரச்சாரங்களில் பேசி வருகிறார். பிழைப்புக்காக வரும் தொழிலாளர்கள் கூலி வேலைகளை செய்தாலும், நாளைக்கு அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கிடைத்துவிட்டால் பாஜகவுக்கு சாதகமாகி விடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு பூதாகரமானது. நாடளவில் இந்த பிரச்சினை குறித்து விவாதகிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த பிரச்சினைக்கு விதை போட்டது சீமான்தான் என்றும் திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, ” வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துக்கள், திமுக அமைச்சர் அவர்களை பானிபூரி வாலா என்று அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் அவர்களை வெளியேற்றக் கோருவது ஆகியவை தான் இன்று நாம் பார்க்கும் பிரச்சினையை தூண்டியுள்ளது” என திமுக மீது குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த ராஜிவ் காந்தி சீமானை சீண்டி ட்வீட் போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜிவ் காந்தி ட்வீட்டில், உழைத்துப் பிழைக்க வரும் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் நம் கருணைக்கு உரியவர்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சுரண்டிக் கொழுத்து வசதி பெற்றுவிட்டு, புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்களை தமிழினத்தின் எதிரிகளாகவும்,அவர்களால் தமிழ்நாட்டுக்கே பேராபத்து என்றும் சீமான் பேசுவது கேலிக்கூத்து” என விமர்சித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ வதந்தி என்றும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்து வருவதாக பிகார் அரசே ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக அரசியல் அரங்கில் இந்த சம்பவம் குறித்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.