லக்னோ: பசுவை, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்தபிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் பசுக்களின் பராமரிப்புக்காக ரூ.750 கோடிஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உத்தர பிரதேசம் முழுவதும் பல பகுதிகளில் கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பசுவதையை தடுக்க சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பசுவதை தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரூ.5 லட்சம் வரை அபராதமும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உத்தர பிரதேசத்தின் பாராபங்கி கிராமத்தை சேர்ந்தமுகமது அப்துல் காலிக் என்பவர்மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஷாமிம் அகமது விசாரணை நடத்தி, முகமது அப்துல்காலிக்கின் மனுவை சமீபத்தில் தள்ளுபடி செய்தார். அப்போது நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:
நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது நமது கடமை. இந்து மதத்தில் சிவன், விஷ்ணு, இந்திரன் எனபல்வேறு கடவுள்களுடன் தொடர்பு உடைய பசு, தெய்வீகமாக போற்றப்படுகிறது.
சிவபெருமானின் வாகனமாக நந்தி தேவர் வீற்றிருக்கிறார். பாற்கடலை கடைந்தபோது தோன்றிய காமதேனு, இந்திரலோகத்தில் வசிக்கிறது. கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணருக்கும் பசுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பசுவின் 4 கால்களும் 4 வேதங்களையும், முகம் சூரிய, சந்திரனையும், தோள் அக்னியையும் குறிக்கிறது. ரிக் வேதம், மகாபாரதத்தில் பசுக்களின் புனிதம் போற்றப்பட்டிருக்கிறது. பசுக்களை கொலை செய்பவர்கள் நரகத்தில் கடுமையாக அவதிப்படுவார்கள் என்றுபுனித நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், மனித குலத்தின்வளர்ப்பு தாயாக பசு விளங்குகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் உலகத்தின் தாயாக பசு விளங்குகிறது.
இந்தியாவில் வேத காலத்தில்இருந்தே பசு வதை தடை செய்யப்பட்டிருக்கிறது. மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களில் பசுவதைதடை தெளிவாக குறிப்பிடப்பட் டிருக்கிறது. கடந்த 19, 20-ம்நூற்றாண்டில் பசுக்களை பாதுகாக்க மிகப்பெரிய இயக்கங்கள் நடத்தப்பட்டன.
இன்றைய சூழலில், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பசுவதையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் பசு வதை தடுப்பு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு அதிதீவிரமாக எடுக்க வேண்டும்.
உத்தர பிரதேச பசுவதை தடுப்புச் சட்டம் 1955-ன்படி மனுதாரர் முகமதுஅப்துல் காலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீதானவழக்கை ரத்து செய்ய முடியாது.வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உத்தர பிரதேச துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுமனதோடு வரவேற்கிறோம். இதில்மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.