12 தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் கொள்ளை தம்பதி போட்ட பலே ஸ்கெட்ச்..! லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்தனர்

திருச்சியில் கொள்ளையடித்த 500 சவரன் நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் , தங்களிடம் 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக புகார் அளித்த கொள்ளை தம்பதி ஒன்று, திருச்சி தனிப்படை போலீசார் 12 பேரை அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கவைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருடிய நகைகளுக்குரிய பணத்தை தருவதற்கு 2 நாட்கள் அவகாசம் கேட்டு கேடி தம்பதி செய்த மோசடி சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திருச்சியில் பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியை சேர்ந்த ராமா, ரத்தன், சங்கர், ராம் பிரசாத் ஆகியோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இவர்களில் ரத்தன், சங்கர் ஆகிய இரு கொள்ளையர்களை பிடித்து விசாரித்தபோது இந்த கும்பல் திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 500 சவரனுக்கு மேல் கொள்ளையடித்திருப்பதும் கொள்ளையடித்த நகைகளை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் பினாய் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பன்னலால் – சோனியா தம்பதியினரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கொள்ளையர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை போலீசார் திருச்சியில் இருந்து ராஜஸ்தான் புறப்பட்டுச்சென்றனர். கொள்ளை நகைகளை பதுக்கி வைத்திருந்த பன்னலால் மற்றும் சோனியா தம்பதியின் வீட்டிற்கு சென்று நகைகளை மீட்க சோதனையிட்டனர்.

தமிழக போலீசாரிடம் தங்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்ட அந்த தம்பதி நகைகளை விற்று விட்டதாகவும், 2 நாட்களில், 25 லட்சம் ரூபாய் பணத்தை உறவினர்களிடம் பெற்று தருவதாக கூறியதை உண்மை என்று நம்பி போலீசார் அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி, ராஜஸ்தானின் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதன்படி கொள்ளையடித்த நகைக்கான பணத்தை தருவதாக தமிழக தனிப்படை போலீசாரை வரவைத்த கேடி தம்பதி அவர்களிடம் பணத்தை கொடுப்பது போல கொடுத்து, ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தாங்கள் திருட்டு நகையை பறிமுதல் செய்ய வந்த கதையை தமிழக தனிப்படை போலீசார் கூறிய நிலையில் ராஜஸ்தான் போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், ராஜஸ்தான் மாநில காவல்துறையை தொடர்பு கொண்டு உண்மை தன்மை குறித்து விளக்கி கூறினர். குறிப்பாக , சோனியா அளித்த புகார் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், சிபிஐ தான் விசாரிக்க இயலும் என்றும் சுட்டிக்காட்டியதால் 12 போலீசாரும் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

12 போலீசாரையும் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த சோனியா, பன்னாலால் தம்பதி திருச்சியில் 58 லட்சம் ரூபாய் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தலைமறைவான வழக்கில் தேடப்படுபவர்கள் என்று கூறப்படும் நிலையில் அவர்களை பிடித்து தமிழகம் அழைத்து வராமல் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கியது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.