தியாகராஜ நகர்: பெங்களூரு தியாகராஜ நகரில் கணேசா கோவில் கோபுரத்தில் இருந்த இயேசு கிறிஸ்து சிலை சேதமானதால், விநாயகர் சிலை வைக்கப்பட்டது.
பெங்களூரு தியாகராஜ நகரில் கணேசா கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுரத்தில் இயேசு கிறிஸ்து சிலை இருந்தது.
இந்நிலையில், அங்கிருந்த இயேசு கிறிஸ்து சிலை அகற்றப்பட்டு, ‘அத்யானந்த பிரபு’ என்ற விநாயகர் – ஹனுமன் என ஒரே சிலையில் இரு உருவம் கொண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவில் டிரஸ்ட் இணை செயலர் சுகுமார் ராஜ் கூறியதாவது:
எனது தாத்தா, இக்கோவிலை 1970ல் கட்டினார். அப்போது மத நல்லிணக்கத்தை எடுத்து காட்டும் வகையில், சுவாமி விவேகானந்தர், பசவண்ணர், சாய் பாபாவுடன், இயேசு கிறிஸ்து சிலையும் வைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சில அமைப்புகள், இயேசு கிறிஸ்து சிலை வைக்க, கோவில் நிர்வாகத்தினர் பணம் வாங்கியதாக குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு சமீபத்திய மத மாற்ற சம்பவத்தை காரணமாக குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் மர்ம நபர்கள், இயேசு கிறிஸ்து சிலையை உடைத்துள்ளனர். எனவே, அந்த இடத்தில், ‘அத்யானந்த பிரபு’ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கிறிஸ்துவ தேவாலயங்களில் நன்கொடை பெறவில்லை. சந்தேகம் இருந்தால், எங்களின் நன்கொடை புத்தகத்தை பார்த்து கொள்ளலாம். இங்குள்ள மக்களுக்கு எதற்காக இந்த கோவில் கட்டப்பட்டது என்பது தெரியும். இப்பகுதியை சேராத சிலர், கோவில் வரலாறு தெரியாமல் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் செயலர் சத்யமூர்த்தி கூறுகையில், ”எல்லா நம்பிக்கைகளையும் துறந்து என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு முக்தி தருவேன் என்று பகவான் கிருஷ்ணா கூறியுள்ளார். மத நல்லிணக்கத்தை வளர்க்கவே இயேசு கிறிஸ்துவின் சிலை நிறுவியதற்கு ஒரே காரணம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement